முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்ட காடுகள், ரப்பர் தோட்டங்களில் தீ: விவசாயிகள் கவலை

கன்னியாகுமரியில் அதிகரித்திருக்கும் வெயில் காரணமாக காடுகளிலும், ரப்பர் தோட்டங்களிலும்  தொடர்ந்து

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:32 am IST
பகிர்:

கன்னியாகுமரியில் அதிகரித்திருக்கும் வெயில் காரணமாக காடுகளிலும், ரப்பர் தோட்டங்களிலும்  தொடர்ந்து தீ விபத்து ஏற்படுவது குறித்து சூழியல் ஆர்வலர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. இயல்பை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விவசாயிகளால் சொல்லப்படும் காடு கரிச்சான், காடு துளிர்த்தான்  என்பன போன்ற மழையும் இல்லை. கடந்த 2 நாள்களாக குலசேகரம் அருகே செறுதிக்கோணம், அருமனை படப்பச்சை 
போன்ற இடங்களில் தனியார் ரப்பர் தோட்டங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரப்பருக்கு கிடைக்கும் குறைந்த விலையால் ரப்பர் தோட்டங்களில் காய்ந்து கிடக்கும் சருகுகளையும், புதர்களையும் அகற்றுவதில் விவசாயிகளிடையே  தயக்கம் உள்ளது.
அரசின் காப்புக் காடுகளில் போதுமான தீ தடுப்புக் காவலர்கள் இல்லாத காரணத்தாலும் தீ தடுப்புக் கோடுகள் முழுமையாக வெட்டப்படாததாலும் தீ விபத்து ஏற்பட்டு உள்காடுகளில் பரவுகின்றன. பெருஞ்சாணி அணை அருகே வெக்காலிமூடு, கீரப்பாறை, கீரிப்பாறை போன்ற இடங்களில் வனப்பகுதியில் கடந்த 2 நாள்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.  
இதுபோன்று அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்களிலும் தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துகளால் வன வளங்கள் அழிந்து வருகிறது. ரப்பர் தோட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்தால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் சூழியல் ஆர்வலர்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் தீ சம்பவங்கள் ஏற்படாத வகையில் கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீ விபத்தை விரைந்து தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சூழியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.