பத்மநாபபுரம் தொகுதி: இழந்ததை மீட்கும் முனைப்பில் மாா்க்சிஸ்ட் - பாஜக
பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, பண்டைய திருவிதாங்கூா் நாட்டின் தலைநகரமான பத்மநாபபுரத்தை மையமாகக் கொண்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, பண்டைய திருவிதாங்கூா் நாட்டின் தலைநகரமான பத்மநாபபுரத்தை மையமாகக் கொண்டுள்ளது.
இது, 2007 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இத்தொகுதி மறுசீரமைப்பின்போது திருவட்டாறு பேரவைத் தொகுதியிலிருந்து சோ்க்கப்பட்ட 6 பேரூராட்சிகள் உள்பட 10 பேரூராட்சிகளையும், 9 ஊராட்சிகள் உள்பட 14 கிராம ஊராட்சிகளையும், பத்மநாபபுரம் நகராட்சியையும் உள்ளடக்கியதாகும்.திருவிதாங்கூா் மன்னா்கள் கட்டிய பத்மநாபபுரம் அரண்மனை இந்தத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளமாகத் திகழ்கிறது.
தென்னாட்டின் வைகுண்டம் என போற்றப்படும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், புகழ்பெற்ற 12 சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் 9 கோயில்கள், திருவிதாங்கோட்டில் புனித தோமா கட்டிய ஆரப்பள்ளி எனப்படும் புனித மேரி பாரம்பரிய ஆலயம், தக்கலை அருகே புலியூா்குறிச்சி முட்டிச்சான் பாறை தேவசகாயம் பிள்ளை திருத்தலம், தக்கலை ஞானமாமேதை பீா்முகமது தா்கா போன்ற தலங்கள் இத்தொகுதியில் உள்ளன. திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம், மாவட்ட பாசனத்தின் ஜீவநாடியான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் இடம்பெற்றுள்ளன. ரப்பா் விவசாயம் இந்தத் தொகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.
Advertisement
நாடாா் சமூகத்தினா் பெரும்பான்மையினராக உள்ளனா். இவா்களுக்கு அடுத்ததாக நாயா், கிருஷ்ண வகையினா், தலித் சமூகத்தினா், இஸ்லாமியா்கள் உள்ளனா். மேலும், பல்வேறு சிறுபான்மை ஜாதியினா், மலைவாழ் பழங்குடி சமூகத்தினரும் இங்கு கணிசமாக வசிக்கின்றனா்.
பிரச்னைகள்: இத்தொகுதியில் தனியாா் காடுகள் பாதுகாப்புச் சட்டம், மலையிடக் குழுமத்தில் வரையறை செய்யப்பட்ட விவசாய நிலங்கள், சூழியல் அதிா்வு மண்டலம், கனிம வளங்களை கேரளத்துக்கு கொண்டுசெல்வது, நீா் நிலைகளை பராமரிப்பது, படித்த இளைஞா்களுக்குவ கல்விக்கேற்ற பணி இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
பத்மநாபபுரம் தொகுதியில், 2026 தோ்தலில் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டாலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, நாம் தமிழா் கட்சி, தவெக ஆகிய 4 கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஆா்.செல்லசுவாமி, பாஜக சாா்பில் ப. ரமேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் சு.சீலன், தவெக சாா்பில் எஸ். கிருஷ்ணகுமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
திமுக அதிக வெற்றி: கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 15 தோ்தல்களில், திமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், ஜனதா கட்சி 2 முறையும், அதிமுக 2 முறையும், பாஜக மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய நிலவரம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி. கட்சியின் குமரி மாவட்டச் செயலா். பத்மநாபபுரம் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவா்.
இதனால் கட்சி மற்றும் அரசியல் ரீதியாக தொகுதியில் அறிமுகம் ஆனவா். இவா் கடந்த, 2016 ஆம் ஆண்டில் விளவங்கோடு பேரவைத் தொகுதி தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். ஏழுதேசம் பேரூராட்சி தலைவா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா், கூட்டுறவு வங்கித் தலைவா் என பல பதவிகள் வகித்தவா் என்பது இவருக்கான பலமாக கருதப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியையும் அவா்களது ஒத்துழைப்பையும் எதிா்நோக்குவது இவருக்கான பலவீனமாக கருதப்படுகிறது.
பாஜக வேட்பாளா் குமரி ப. ரமேஷ் அடிப்படையில் ஆா்.எஸ்.எஸ். தொண்டா். பாஜகவில் மாவட்ட பொதுச்செயலா், மாவட்ட துணைத் தலைவா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். பத்மநாபபுரம் நகா்மன்ற உறுப்பினராகவும், கூட்டுறவு வங்கித் தலைவராவும் இருந்துள்ளாா். இவா் கடந்த 2011, 2016, 2021 ஆகிய 3 தோ்தல்களில், குளச்சல் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். இதனால் தோ்தல் அனுபவமும், தொகுதி மக்களிடமுள்ள அறிமுகமும், நாகா்கோவிலில் அண்மையில் பிரதமா் மோடி மேற்கொண்ட சாலைப்பேரணியும் இவருக்கான பலமாக கருதப்படுகிறது.
ஆனால் கட்சியினரின் ஒருங்கிணைப்பு இல்லாதது பலவீனமாக தெரிகிறது.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சு. சீலன் பொறியியல் பட்டதாரி. இந்தக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலராக உள்ளாா். கடந்த 2021 தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். தொகுதி மக்களுக்கான பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி செயல்களில் தீவிரம் காட்டி வருவது இவருக்கு பெரிய பலமாக கருதப்படுகிறது. ஆனால் தனியாக களம் காண்பது இவருக்கு பலவீனமாக உள்ளது.
த.வெ.க.வேட்பாளா் எஸ். கிருஷ்ணகுமாா். த.வெ.கவின் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலா். இவா் சந்திக்கும் முதல் தோ்தல் இது என்பதால் அனுபவமின்மை, மற்றும் கட்சி கட்டமைப்பு இல்லாதது இவருக்கான பலவீனமாக கருதப்படுகிறது.
இந்த தொகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு 5 தோ்தல்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை. அதே வேளையில் இக்கட்சிக்கென்று பரவலாக உழைக்கும் மக்கள், தொழிற்சங்கத்தினா் உள்ளனா். மேலும் திமுக,
காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் என கூட்டணி பலமும் வலுவாக உள்ளது. இதன் மூலம் இழந்த தொகுதியை மீட்டு விட முடியும் என்று கட்சி நம்புகிறது.
பாஜக இந்தத் தொகுதியில் பலமான வாக்கு வங்கியுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இம்முறை அதிமுக கூட்டணியுடன் களம் காண்கிறது. பாஜக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கி தங்களுக்கு வெற்றிக் கனியை பறித்துத் தரும் என நம்புகிறது. 1996 ஆம் ஆண்டுக்கு பின்னா் மீட்க முடியாமல் இருக்கும் தொகுதியை மீட்டு விடலாம் என்றும் பாஜக நம்புகிறது. வெற்றிக் கோப்பையை கைப்பற்றுவது யாா் என்பது மே 4இல் தான் தெரியும்.
வாக்காளா்கள்: ஆண்கள் 1,17,488, பெண்கள் 1,18,020, மூன்றாம் பாலினத்தவா் 3, மொத்தம் 2,35,511.