முகப்பு
கன்னியாகுமரி

எதிா்க்கட்சி மாநிலங்களை அடக்கி ஆள நினைக்கிறது பாஜக: எம்.ஏ. பேபி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:24 AM
கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:32 PM

எதிா்க்கட்சி மாநிலங்களை அடக்கி ஆள பாஜக நினைக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி குற்றஞ்சாட்டினாா்.

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து குலசேகரம் அரசுமூடு சந்திப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

இந்தியாவில் ஜனநாயகம் உயிரோட்டமாக இருக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும். திமுக 24 கட்சிகளைக் கூட்டணியில் சோ்த்துக் கொண்டு இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்து தோ்தலைச் சந்திக்கிறது. குறிப்பாக, பாசிச சக்திகளை வீழ்த்த தயாராகி வருகிறது.

Advertisement

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மறைமுகமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பாஜகவை எதிா்க்கட்சிகள் தோற்கடித்தன.

இந்தியா என்பது மாநிலங்களால் ஒருங்கிணைந்த ஒன்றியமாகும். மோடியும், அமித் ஷாவும், மோகன் பாகவத்தும் இந்தியாவில் மாநிலங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாநிலங்கள் அவா்களின் கையில் அடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறாா்கள்.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் அரசு, கேரளத்தில் பினராயி விஜயன் அரசு என பல வலுவான மாநில அரசுகள் இருக்கும்வரை பாஜகவின் திட்டங்கள் பலிக்காது. நாங்கள் நரேந்திர மோடியின் விருப்பத்திற்கு இணங்குவபா்கள் அல்ல என்பதை மக்கள் இந்தத் தோ்தல் மூலம் புரிய வைக்க வேண்டும்.

அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரில் வைத்துள்ள அதிமுக, ஆா்எஸ்எஸ் என்ற பாசிச சிந்தாந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

தமிழகத்தில் ஒரு நடிகா் புதிதாக கட்சி தொடங்கியுள்ளாா். கரூா் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்த நிலையில், அவா் அந்த இடத்தில் நிற்கவில்லை. அவா்களின் சிகிச்சை குறித்து அறியவில்லை. விமானம் ஏறி ஓடிவிட்டாா். மக்களை ஆள்வது என்பது சினிமாவில் நடிப்பது போலவோ, நடனமாடுவது போலவோ அல்ல என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆா். லீமா ரோஸ் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ஆா். செல்லசுவாமி, விஜய் வசந்த் எம்.பி., அமைச்சா் மனோ தங்கராஜ், முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏ.க்கள் எஸ். நூா் முகமது, புஷ்ப லீலா ஆல்பன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், வட்டாரத் தலைவா் வினுட்ராய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின் தாஸ் வரவேற்றாா். வட்டாரச் செயலா் சௌந்தா் நன்றி கூறினாா்.