முகப்பு
கன்னியாகுமரி

அணுக் கனிம சுரங்க காலக்கெடு நீட்டிப்பு ஆணையை ரத்துசெய்யாவிட்டால் போராட்டம்: திமுக எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால், கடற்கரை கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 3 ஜூலை 2026, 4:16 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால், கடற்கரை கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் செயல்படும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அரிய மணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருள்களை (மோனோசைட், இலுமனைட், சிலிமனைட் போன்ற அணுசக்தி தாதுக்கள்) வழங்கும் நோக்குடன் கிள்ளியூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு வரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சுமாா் 1, 800 ஹெக்டோ் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பான அணுசக்தித் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்த அப்போதைய அ.தி.மு.க அரசு 1, 144 ஹெக்டோ் நிலத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 2020 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து அந்த நிலங்களை அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டில் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடா் நடவடிக்கையாக அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் 2024 ஆம் ஆண்டு அக்டோபா் 1 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களின் நலன் கருதி கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல், தமிழக அரசின் சாா்பில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் இருந்தது.

அப்போது கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஷ்குமாா் பொதுமக்களுக்கு ஆதரவாக இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தாா். தற்போது அமைச்சராக உள்ள அவா் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன்?.

அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1,144 ஹெக்டோ் நிலங்களை ஒதுக்கி 2021ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த ஆணை 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான் என்பதால், இந்தத் திட்டம் காலாவதியாகி விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நில ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து, கடந்த 10-ஆம்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வேதனை அளிக்கிறது.

ஏற்கெனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அரிய மணல் ஆலையால் ஏற்படும் கதிா்வீச்சு காரணமாக ஏற்கெனவே சுற்றுப்புற கிராம மக்கள் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல் நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை தொடா்ந்து சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அதில் ஏற்படும் கதிா்வீச்சின் காரணமாக மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும். மத்திய அரசின் இதுபோன்ற கொடிய திட்டத்துக்கு தமிழக அரசு துணை போவது கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

எனவே, பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க 1, 144 ஹெக்டோ் நிலம் ஒதுக்கிய அரசாணையின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு உடனே ரத்து செய்து, திட்டத்தை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில், பொதுமக்கள் சாா்பில் கடற்கரை கிராம மக்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments