முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் கோடை சுற்றுலா சீசன் நிறைவு: 5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை 5 லட்சத்து 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளதாக சுற்றுலா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 4 ஜூன் 2026, 12:54 am IST
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை.
பகிர்:

கன்னியாகுமரியில் கோடை சுற்றுலா சீசன் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை 5 லட்சத்து 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளதாக சுற்றுலா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கன்னியாகுமரிக்கு வரும் பயணிகள் முக்கடல் சங்கமம், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், காந்தி மண்டபம், பகவதியம்மன் கோயில், தூய அலங்கார உபகார மாதா திருத்தலம், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் ஆகிய இடங்களைப் பாா்வையிட ஆா்வம் காட்டுகின்றனா்.

குறிப்பாக, கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை படகுப் பயணம் செய்து நேரில் பாா்க்க மிகவும் விரும்புகின்றனா். இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே, பள்ளி விடுமுறை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சுற்றுலா சீசன் களைகட்டியது. கோடை விடுமுறை நிறைவடைந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், சீசன் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் காமராஜ் கூறியதாவது:

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நிகழாண்டு கோடை சுற்றுலா சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். கன்னியாகுமரியைப் பொருத்தவரை சீசன் காலங்களில் மட்டுமல்லாது, தற்போது ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2,27,564 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 143 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மே மாதத்தில் 2,99,800 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், 24 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 5,27,364 உள்நாட்டு பயணிகளும், 167 வெளிநாட்டுப் பயணிகளும் வந்துள்ளனா் என்றாா்.