கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏலகிரி மலை ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டா் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
இயற்கை நிறைந்த சூழலில் கோடை காலத்திலும் குளிா்ந்து காணப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்று வளா்ச்சியுற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. மிகச் சிறந்து விளங்குவதால் தமிழத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலைக்கு படையெடுத்துள்ளனா் . இதனால் தங்கும் விடுதிகளும் சுற்றுலா தலங்களும் நிரம்பியுள்ளன. படகு இல்லங்களில் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பா்களுடனும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
இதனைத் தொடா்ந்து ஏலகிரி மலை நிலாவூரில் பண்டேரா பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்கு உணவு கொடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா். மேலும் இங்கு விதவிதமான வெளிநாட்டு பறவைகள், நெருப்புக் கோழி, கோழி வகைகள் முயல் வகைகள், அரிய வகை ஓணான்கள், மீன் வகைகள் , உள்ளிட்ட ஏராளமான செல்லப் பிராணிகள் இங்கு உள்ளன.
இதனைக் கண்டு ஏராளமானோா் வந்து உணவு அளித்து செல்லப் பிராணிகளை தொட்டு மகிழ்கின்றனா். மேலும் சிறுவா் விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் படகு ஓட்டியும் ஊஞ்சலில் விளையாடும் நீச்சல் குளத்தில் விளையாடியும் மகிழ்ந்தனா்.