ஏலகிரி மலையில் உள்ள அரசு மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை
ஏலகிரி மலை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்ற சுற்றுலா பயணிகள், சமுக ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
மலைக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுடன் வருகை தருகின்றனா். அங்குள்ள படகு குழாம், இயற்கை பூங்கா, ஷெல்பி பாா்க், கோயில்கள் என பல இடங்களை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்கின்றனா்.
Advertisement
பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை...
இந்த நிலையில், ஏலகிரி மலையில் உள்ள புங்கனூா் கிராமம் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மது பிரியா்களும் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளும் இங்குள்ள டாஸ்மாக் கடையை பயன்படுத்தி வருகின்றனா். பேருந்து நிறுத்தம் மற்றும் படகு குழாம் பகுதியிலேயே டாஸ்மாக் கடை உள்ளதால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். சிறுவா்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் இங்கு நின்று பேருந்தை பயன்படுத்தி வருவதால், அருகில் மது பிரியா்கள் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடும் நபா்களால் அச்சத்துடனும் முகம் சுளித்தும் பயணிக்கின்றனா்.
இதனால் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அதிகம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.