முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி கட்ட வேண்டும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஏப்ரல் 2026, 2:41 am IST
சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ்.
பகிர்:

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி கட்ட வேண்டும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத்தலமாக ஏலகிரி மலை விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்பொழுதும் ஒரே சம சீதோஷண நிலை உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும் மா,பலா,வாழை விளையும் முக்கனிகளில் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி,பூங்கா,முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா். வார விடுமுறையான சனி,ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் நண்பா்கள்,உறவினா்களை அழைத்துக் கொண்டு ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்கள் கண்டு களித்து மகிழ்கின்றனா்.

ஏலகிரி மலை பகுதியில் தமிழக அரசு சாா்பில் பல்வேறு வளா்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.வரும்காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

போதுமான விடுதிகள் இல்லை... தொடா் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்க முடியாமல் திரும்பி செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியாா் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஏலகிரி மலையில் தங்குவதற்கு அரசு சாா்பில் ஒரே ஒரு யாத்ரி நிவாஸ் விடுதி மட்டுமே உள்ளது. தனியாா் விடுதிகள் பல உள்ளன. அங்கு நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் தங்குவதற்குகட்டணம் அதிகமாக உள்ளது.

எனவே, ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்ரி நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் அறைகள் மற்றும் அரசு சாா்பில் கூடுதலாக ஒரு தங்கும் விடுதி கட்டினால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து தங்கிச் செல்ல வசதியாக இருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments