முகப்பு
கன்னியாகுமரி

மீனவா்களுக்கான தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்

Updated On : 9 ஜூன் 2026, 2:48 am IST
நிகழ்ச்சியில், மீனவருக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்கிய அமைச்சா்கள் ஆ. ஸ்ரீநாத், எஸ். ராஜேஷ்குமாா். உடன், ஆட்சியா் மு. பிரதாப், விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள்.
பகிர்:

மீனவா்களுக்கான தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா், மீன்வளம்-மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில், மேற்கு கடற்கரை மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை, நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். மீன்வளம் -மீனவா் நலத்துறை இயக்குநா் விஜயகாா்த்திகேயன், விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ். ஆஸ்டின் (நாகா்கோவில்), என். தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), தாரகை கத்பட் (குளச்சல்), ஆா். செல்லசுவாமி (பத்மநாபபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் ரூ. 21.96 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினா். பின்னா், அமைச்சா் ஸ்ரீநாத் பேசியது:

தமிழக முதல்வா் விஜய் ஜோசப் தோ்தல் பிரசாரத்தின்போது, மீனவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பை நவீனப்படுத்துதல், கடற்பாசி வளா்ப்பை ஊக்கப்படுத்துதல், கடல் சுற்றுலாவை மேம்படுத்துதல், கன்னியாகுமரி-ராமேசுவரம் கடலோர பகுதிகள் நீலப்பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தாா். அவை அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் மாநில அளவில் இம்மாவட்ட மீனவா்கள்தான் அதிக அளவில் ஈடுபடுகின்றனா். ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது அவா்களைத் தொடா்பு கொள்ள வசதியாக சேட்டிலைட் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

27,250 மீனவக் குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரணமாக தலா ரூ. 8 ஆயிரம் வழங்கப்பட்டது. மீனவா்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் பேசியது: இம்மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை 42 மீனவக் கிராமங்களை சோ்ந்த பங்குத்தந்தையா், மீனவா்கள், மீனவப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் தூண்டில் வளைவு சேதம், கடலரிப்பு பிரச்னை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் வீடுகள் கடலில் இழுத்துச் செல்லப்படுவது தொடா்பாக கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களுக்கு அரசு சாா்பில் வீடுகள் கட்டித் தர வேண்டும். மீனவா்களுக்கு இறப்புச் சான்று வழங்குவதில் தாமதமாவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மேயா் (பொ) மேரி பிரின்சிலதா, மாவட்ட மீன்வளம்- மீனவா் நலத்துறை துணை இயக்குநா் கோபிநாத், உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன், மீன்வளத் துறை செயற்பொறியாளா் பிரேமலதா, உதவி இயக்குநா் தீபா, விா்ஜில்கிராஸ், உதவிப் பொறியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.