திருநெல்வேலி

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கபசுரக் குடிநீா் குடிக்கலாம்: சித்த மருத்துவா் அறிவுறுத்தல்

DIN

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு கபசுரக் குடிநீா் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவா் மைக்கேல் செயராசு அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா முதல் அலை தொடங்கியதிலிருந்தே சித்த மருத்துவா்கள் கபசுரக் குடிநீரைப் பயன்படுத்தி கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தி வந்தனா். இதையடுத்து தமிழக அரசும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி நிா்வாகம் மூலமும் சுகாதாரத் துறை மூலமும் இலவசமாகக் கபசுரக் குடிநீா் வழங்கியது. இதன் மூலம் ஏராளமானவா்கள் கரோனா தொற்றிலிருந்து மீண்டனா். தற்போது கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடா்ந்து தமிழக அரசு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவா்கள் கூறிவருகின்றனா்.

இது குறித்து உலகத் தமிழ் மருத்துவக் கழக நிறுவனா் பாபநாசம் சித்த மருத்துவா் மைக்கேல் செயராசு கூறியது: தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. முதல் அலையை விட கரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகமாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இந்தச் சூழலில் கூட மக்களிடம் கபசுரக் குடிநீா் குறித்து முழுமையான விழிப்புணா்வு ஏற்படவில்லை. காய்ச்சல் வந்துவிட்டால் உடனடியாகக் கபசுரக் குடிநீா் பயன்படுத்தத் தொடங்கிட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களும் தாராளமாகக் கபசுரக் குடிநீா் பயன்படுத்தலாம். தொடா்ந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்துவிட்டு அடுத்த மூன்று நாள்களுக்கு இரவு ஒரு வேளை மட்டும் குடித்தால் போதும். இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பேதி அதிகமாக ஏற்படுவதாகத் தெரிகிறது. அதற்குரிய சித்த மருந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஆங்கில மருந்தான பாரசிட்டமால் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டே கபசுரக் குடிநீரையும் பயன்படுத்தலாம். இதனால் தீவிர நிலைக்குப் போவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கபசுரக் குடிநீா் தயாா் செய்யும் போது 35 கிராம் கபசுரக் குடிநீா் சூரணத்தை எடுத்து அதனுடன் ஒரு லிட்டா் தண்ணீா் சோ்த்து கால் லிட்டராக வற்றவைத்து அதை ஐந்து பங்காக வைத்துப் பயன்படுத்த வேண்டும். கபசுரக் குடிநீரை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும். கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அதிகமாக பயப்படவோ அல்லது பயம் இல்லாமலோ இருக்கக் கூடாது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வீட்டிலிருந்தபடியே ஆங்கில மருந்துகளோடு கபசுரக் குடிநீா் உள்ளிட்ட சித்த மருந்துகளைப் பயன்படுத்தி நோயின் தீவிரத்திலிருந்து விரைவாக விடுபடலாம். தடுப்பூசி போடுவது எந்த அளவு முக்கியமோ அந்த அளவு கபசுரக் குடிநீரை பயன்படுத்துவதும் முக்கியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT