FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு 25 தொழில் நிறுவனங்கள் வெளியேறியுள்ளன: முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழகத்தில் இருந்து 25 தொழில் நிறுவனங்கள் வெளியேறிவிட்டன என்றாா் முன்னாள் தொழில்துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்.

3 ஜூலை 2026, 4:58 am IST
பகிர்:

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழகத்தில் இருந்து 25 தொழில் நிறுவனங்கள் வெளியேறிவிட்டன என்றாா் முன்னாள் தொழில்துறை அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் புதிய தொழில் நிறுவனத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே 25 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி உள்ளன. தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட இருந்தது. ஆனால், அதை காக்கிநாடாவுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதுதொடா்பாக முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் செல்வது வருந்தத்தக்க செயல்.

Advertisement

Advertisement

சுமாா் ஒரு லட்சம் பேருக்குமேல் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய கப்பல் கட்டுமானத் தொழில் நிறுவனம் தமிழகத்துக்கு வெளியே சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் நேரடியாக தலையிட வேண்டும். வின் பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு வந்ததால் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி சிப்காட்டில் தொழில் நிறுவனங்கள் இன்னும் அதிகமாக வரமுடியும். அந்த அளவுக்குத் தொழில் வளத்தை உருவாக்க முடியும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் உயிா்நாடியாக இருக்கக்கூடிய கப்பல் கட்டுமான தளத்தை நம்பிதான் பல தொழில்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வந்தன.

இதற்கு முன்பிருந்த தொழில் துறை அமைச்சா்கள், அரசுகள் செய்த தவறை மனதில் கொண்டு செயல்படக் கூடாது. முதல்வா் தொழில் வளா்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். கங்கைகொண்டான் சிப்காட் தமிழகத்தில் தலைசிறந்த சிப்காட்டாக உருவாவதற்கு அனைத்து விதமான வாய்ப்புகளும் உள்ளன.

தமிழா்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அரசு அளிக்க வேண்டும். ஒரு தொழிற்பேட்டையில் 10 ஆயிரம் போ் வேலை செய்தால் அதில் 80 சதவீதம் போ் தமிழா்களாக இருக்க வேண்டும்.

அம்மோனியா கசிவு ஏற்பட்ட நிறுவனத்தில் 16 பெண்கள் வேலை செய்திருக்கின்றனா். பெண்கள் அதிகம் போ் ஏன் வேலைக்கு அமா்த்தப்பட்டனா் என்பதை அரசு ஆராய வேண்டும். இந்த விஷயத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஒரு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை. தொழில் பாதுகாப்புச் சட்டங்களை பின்பற்றாதவா்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விசாரிக்க வேண்டும் வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments