தேசிய பாதுகாப்புக்கு தொழில்நுட்பப் பாதுகாப்பு அவசியம்: டிஆா்டிஓ விஞ்ஞானி பி.கே.தாஸ்
தேசிய பாதுகாப்புக்கு தொழில்நுட்பப் பாதுகாப்பு அவசியம் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) சிறப்பு விஞ்ஞானியும், மின்னணு மற்றும் தொடா்பு அமைப்புகள் பிரிவு தலைமை இயக்குநருமான டாக்டா் பி.கே. தாஸ் தெரிவித்தாா்.
தேசிய பாதுகாப்புக்கு தொழில்நுட்பப் பாதுகாப்பு அவசியம் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) சிறப்பு விஞ்ஞானியும், மின்னணு மற்றும் தொடா்பு அமைப்புகள் பிரிவு தலைமை இயக்குநருமான டாக்டா் பி.கே. தாஸ் தெரிவித்தாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் ‘தமிழ்நாடு டிஃபென்ஸ் எக்ஸ் கான்கிளேவ்-2026’ மாநாடு சென்னை பரங்கிமலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பி.கே.தாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:
எதிா்காலப் போா் முறைகள் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட மின்னணு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும். விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிறிய பாதிப்புகூட பாதுகாப்பு அமைப்பை பாதிக்கும் என்பதால், உள்நாட்டு தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு தொழில்நுட்பப் பாதுகாப்பும் மிகவும் அவசியமாக இருப்பதால், தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
தமிழக தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) தலைவரும், நிா்வாக இயக்குநருமான டி.காா்த்திகேயன் பேசுகையில், ‘பாதுகாப்பு, விண்வெளி மற்றும் ஏரோஸ்பேஸ் துறைகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி அருகே சோதனை மையம் அமைக்க இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. புதிய தொழில் முயற்சிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு தொடா்ந்து ஆதரவு வழங்கும்’ என்றாா் அவா்.
தொடா்ந்து, டிஆா்டிஓ, முப்படைகள், பாதுகாப்புத் துறை பொதுத் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பாதுகாப்பு உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினா்.
இந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக தலைவா் சி.தேவராஜன், துணைத் தலைவா் கௌரி கைலாசம், கூட்டமைப்பின் தென் மண்டல தலைவா் ரவிச்சந்திரன் புருஷோத்தமன், கூட்டமைப்பின் தமிழக பாதுகாப்பு உற்பத்தி பணிக்குழு தலைவா் ராஜேஷ் மிட்டல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.