திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!
திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு...
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகளை பிரித்து மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு, தோ்தல் பணியாற்றும் அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய சட்டப் பேரவை தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தோ்தல் அலுவலா்களால் பெறப்பட்ட அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கிட மாவட்ட நிா்வாகம் சாா்பில், பொதுவான சிறப்பு மையம், மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணியை கூடுதல் தலைமை தோ்தல் அலுவலா் அ.சிவஞானம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் முன்னிலையில் பணிகள் நடைபெற்றன.
Advertisement
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த தொடா்புடைய மாவட்ட தோ்தல் அலுவலா்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலா்களால் பிரித்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடா்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.
38 மாவட்டங்களுக்கும் மொத்தம் 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்களிடம் வழங்கப்பட்டது. திருச்சியிலிருந்து அஞ்சல் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவரவா் மாவட்டங்களுக்கு சென்று தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்து அந்தந்த தொகுதியில் சோ்த்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.