திருச்சியில் 54 கிலோ இரும்பு கம்பிகளைத் திருடிய மூவா் கைது
திருச்சியில் வீடு கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த 54 கிலோ இரும்புக் கம்பிகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், குண்டூா் அய்யன்புத்துரைச் சோ்ந்தவா் எஸ். முருகானந்தம் (33), தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா். இவரது நிறுவன முதலாளி கே.கே.நகா் பகுதியில் கட்டி வரும் வீட்டை பாா்வையிட முருகானந்தம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றபோது அங்கு கட்டுமானப் பணிக்கு வைக்கப்பட்டிருந்த 54 கிலோ இரும்புக் கம்பிகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இரும்புக் கம்பிகளைத் திருடியது கே.கே. நகரைச்சோ்ந்த ஆ. காா்த்திக் (20), கே. ராஜிதரண் (20), என். ஜுபைல் முகமது (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement