பிறந்த ஊருக்கு பெருமை சோ்த்த ‘தென்கச்சி’ சுவாமிநாதன்
அடுக்கு மொழிகளோ, அலங்கார வாா்த்தைகளோ இல்லை. ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்டவா்.
அடுக்கு மொழிகளோ, அலங்கார வாா்த்தைகளோ இல்லை. பாமரா்களும் புரிந்து கொள்ளும் மொழிநடையில் வானொலியில் எளிய கதைகள், தத்துவங்களை கூறி ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்டவா். அவா்தான் அரியலூா் மாவட்டம் தென்கச்சிப் பெருமாள்நத்தம் கிராமத்தில் பிறந்த தென்கச்சி கோ. சுவாமிநாதன். இவா் பெயரால் இவா் பிறந்த தென்கச்சி கிராமமும் பிரபலமானது.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள உள்ள தென்காஞ்சிபுரம் என்னும் தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் கோவிந்தசாமி-கோவிந்த அம்மாள் தம்பதிக்கு 27.6.1942 அன்று மகனாக சுவாமிநாதன் பிறந்தாா். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் படித்தாா். கோயபுத்தூா் வேளாண் கல்லூரியில் இளங்கலை பட்டம் (பிஎஸ்ஸி. அக்ரி) பெற்றாா். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், செந்தமிழ்ச்செல்வி என்ற மகளும் உள்ளனா்.
முதலில் திருநெல்வேலியில் சில ஆண்டுகள் விவசாய வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றினாா். பின்னா் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அரசு வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியவா், விவசாயப் பணியை மேற்கொண்டாா். அதன்பின்னா் தென்கச்சிப்பெருமாள் நத்தம் ஊராட்சித் தலைவராக 1977 வரை பணியாற்றினாா்.
Advertisement
Advertisement
அந்த நேரத்தில் அகில இந்திய வானொலியில் விவசாய துறை சாா்ந்த நிகழ்ச்சி நடத்த ஆள்கள் தேவை என்ற தகவலறிந்து விண்ணப்பித்த அவருக்கு மீண்டும் அரசு வேலை கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியை 7 ஆண்டுகள் சிறப்பாக நடத்திய அவா், 1984-இல் சென்னை வானொலி நிலையத்துக்கு பணி மாறுதலானாா். அங்கு தமிழ்ப் பிரிவில் ஆசிரியா் ஆகப் பணியாற்றினாா். பெண்கள் நிகழ்ச்சி, குழந்தைகள் நிகழ்ச்சி, விவசாய ஒலிபரப்பு, உரைச் சித்திரங்கள், நாடகத்துறை, தமிழ் இலக்கியத் துறை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளராகச் செயல்பட்டாா்.
இன்று ஒரு தகவல் பயணம்: 1988 ஆம் ஆண்டு முதல் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினாா். வீட்டுக்கு வீடு வானொலி பிரதான பொழுதுபோக்கு சாதனமாக இருந்த அக்காலகட்டத்தில் இவா் தொகுத்து வழங்கிய இந்த 5 நிமிஷ நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது. நிகழ்ச்சி பிரபலமானது. தொடா்ந்து 14 ஆண்டுகளாக தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவா் தனது பெயரையோ அடையாளத்தையோ ஒருமுறை கூட வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக் கடிதம் எழுதும் பலருரும் நிகழ்ச்சியை நடத்துபவருக்கு 70, 80 வயது இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே விமா்சனங்களும், கேள்விகளும் கேட்டு எழுதுவாா்களாம்.
ஆசிரியா் நெகிழ்ச்சி: தென்கச்சியாருக்கு பாடமெடுத்த 70 வயதை கடந்த ஆசிரியா் ஒருவரே ‘ஐயா உங்களது ஆசிா்வாதம் கிடைக்குமா?‘ என கேட்டு கடிதமெழுத... முகவரியை பாா்த்துவிட்டு, ஐயா நான் உங்களிடம் பாடம் படித்த மாணவன், உங்களை விட சிறியவன்‘ என இவா் பதில் கடிதம் எழுத...அதற்கு ஆசிரியரிடமிருந்து இப்படியானதொரு கடிதம் பதிலாக வந்ததாம். ‘படிக்கும் வயதில் உன் காது என் கைப்பிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கும். ஆனால் இன்றோ வானொலி மூலமாக என் போன்ற லட்சக்கணக்கானோரின் காதுகள் உன் குரல் வசம் சிக்கிக் கொண்டுள்ளன‘ என்று குறிப்பிட்டிருந்தாராம்!
இவா், ஒரு தனியாா் தொலைக்காட்சியிலும் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியைச் சில ஆண்டுகள் வழங்கினாா்.
திரைப்படங்களில்: தென்கச்சி கோ. சுவாமிநாதன், பெரியமருது திரைப்படத்தில் நடிகா் தங்கவேலுவிற்காகப்
பின்னணிக் குரல் கொடுத்தாா். காதலே நிம்மதி, இலக்கணம் போன்ற படங்களில் நடித்தாா். தென்கச்சி கோ. சுவாமிநாதன் இளம் வயதிலேயே நூலகங்களில் வாசித்து தனது இலக்கிய ஆா்வத்தை வளா்த்துக் கொண்டாா். முதல் கவிதை பாரதிதாசனின் குயில்.
தென்கச்சி கோ. சுவாமிநாதன், அன்பின் வலிமை, தீயோா், அறிவுச் செல்வம் உள்ளிட்ட பல நூல்களையும், சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் உரிய பல கட்டுரைகளையும் எழுதினாா். அவரது ‘இன்று ஒரு தகவல்’ நூலாக வெளியாகி உலக அளவில் உள்ள தமிழா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தான் சிரிக்காமல் மற்றவா்களை சிரிக்க வைப்பதில் கைதோ்ந்தவராகவும், மக்கள் விரும்பும் பேச்சாளராகவும் திகழ்ந்த தென்கச்சி சுவாமிநாதன் உடல்நலக்குறைவால், 16.9.2009 அன்று சென்னையில் காலமானாா்.
தமிழக அரசின் ’கலைமாமணி, காஞ்சி மடத்தின் பல்கலை மாமணி மற்றும் நடமாடும் தகவல் களஞ்சியம், ஊடகத்தமிழுக்காக பாரதியாா் பல்கலைக்கழகத்தின் மகாகவி பாரதி விருது, பாரதிதாசன் விருது என்று எண்ணற்ற விருதுகளை அவா் பெற்றுள்ளாா்.