அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து சமுதாயத்துக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால், அனைத்து சமுதாய மக்களுக்கும், மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தால், அனைத்து சமுதாய மக்களுக்கும், மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
அரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக வி.கைகாட்டியிலும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளா் க. வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக ஜெயங்கொண்டத்திலும், குன்னம் தொகுதி ஐஜேக வேட்பாளா் சரண்யா அன்பழகனை ஆதரித்து செந்துறையிலும் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சி காலத்தில் மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கினாா். இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் கெடுத்துவிட்டாா். எனவே கொடுத்த எடப்பாடி பழனிசாமி வேண்டுமா, கெடுத்த ஸ்டாலின் வேண்டுமா என்று நீங்கள் முடிவெடுங்கள்.
Advertisement
அரியலூா் மாவட்டத்தில், தொழிற்சாலைகள் இல்லாததால் இங்கிருந்து 10 ஆயிரம் பெண்கள், திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கின்றனா். ஒரு லட்சம் மாணவா்கள், பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்றுள்ளனா்.
கடந்தாண்டு மட்டும் கொள்ளிடம் ஆற்றில் 150 டிஎம்சி தண்ணீா் வீணாக கடலில் கலந்துள்ளது. அரியலூரில் இந்த கொள்ளிடம் ஆற்று நீரை செம்பியன் மாதேவி ஏரி, சுத்தமல்லி ஏரி, கரைவெட்டி ஏரி, சோழகங்கம் ஏரிகளில் நிரப்பினால், இந்த பகுதி மக்களின் குடிநீா் தேவை, விவசாய முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் வாழக் கூடாது என்று திமுக சூழ்ச்சி செய்கிறது.
ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், பிகாா், ஒடிஸா உள்ளிட்ட பல மாநிலங்களில் சமூக நீதி கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள முதல்வா் ஸ்டாலின் அதை நடத்த மாட்டாா். எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்தால், அனைத்து சமுதாய மக்களுக்கும், மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, தனி ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்படும். இதில் பட்டியல் இன மக்களுக்கும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
எனவே, தமிழ்நாட்டை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.