"தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக வேண்டும்'
2019 ஜன.1-ஐ தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர அறிவுறுத்தியுள்ளார்
2019 ஜன.1-ஐ தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர அறிவுறுத்தியுள்ளார் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் எம். விஜயகுமார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கடம்பர்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மாயனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமை எம். விஜயகுமார், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த. அன்பழகன் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியரகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட பார்வையாளர் கூறியது: கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பேரவைத் தொகுதியில் மொத்தம் 1,97,183 வாக்காளர்களும், கரூர் தொகுதியில் மொத்தம் 2,26,075 வாக்காளர்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 1,99,872 வாக்காளர்களும், குளித்தலை தொகுதியில் 2,10,036 வாக்காளர்களும், 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 8,33,166 வாக்காளர்களும் உள்ளனர்.
அனைத்து வட்டாட்சியரகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வரும் 31-ம் தேதி வரை வைக்கப்படும். இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 14,033 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் குறித்த புகார்களுக்கு ஆட்சியரக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 04324-257502 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர இந்த முகாமைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு. சரவணமூர்த்தி, லியாகத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.