FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

வானில் நிகழும் அரிய 'புளூ மைக்ரோ மூன்' நிகழ்வு பற்றி...

Updated On : 31 மே 2026, 3:55 pm IST
புளு மூன் - நாசா புகைப்படம் - NASA
பகிர்:

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் இன்று (மே 31, ஞாயிற்றுக்கிழமை) 'புளு மைக்ரோ மூன்' எனும் ஓர் அதிசய நிகழ்வு நிகழவிருக்கிறது.

புளு மூன்

புவியைச் சந்திரன் சுற்றும் கால அளவு 29.5 நாள்கள். அதனால் தோராயமாக மாதத்திற்கு ஒருமுறை பௌர்ணமி (முழு நிலவு) வரும். ஆங்கில மாதத்திற்கு 30 அல்லது 31 நாள்கள் என்பதால் இந்த வித்தியாசத்தின் காரணமாக ஒரே (ஆங்கில) மாதத்தில் இரு பௌர்ணமி நாள்கள் (முழு நிலவு) வரும். இவ்வாறு ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியை 'புளு மூன்' என்று அழைக்கிறார்கள். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறும்.

Advertisement

Advertisement

அந்த வகையில், நடப்பு மே மாதத்திலும் மே 1 ஆம் தேதி ஏற்கெனவே ஒரு பௌர்ணமி வந்த நிலையில், இன்று(மே 31) பௌர்ணமி நாள் வருகிறது.

மைக்ரோமூன்

புவியின் நீள்வட்டப் பாதையில் சந்திரன் மிக நீண்ட தூரத்தில் (252,360 மைல் அல்லது 406,135 கிமீ தூரத்தில் ) இருக்கும்போது சந்திரன், வழக்கமானதைவிட மிகச்சிறியதாகவும் மங்கலாகவும் தெரியும். அந்த நேரத்தில் 'மைக்ரோ(சிறிய) மூன்' என்று அழைக்கப்படுகிறது. சந்திரன், வழக்கமான அளவைவிட 6% குறைவாகவும் 10% மங்கலாகவும் தெரியும். இதுவும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. (இதுவே புவிக்கு மிக அருகில் சந்திரன் வரும்போது அதை 'சூப்பர் மூன்' என்று அழைக்கின்றனர். சூப்பர் மூனைவிட மைக்ரோமூன் 14% சிறியதாக இருக்கும்).

புளு மைக்ரோமூன்

இந்த புளு மூன், மைக்ரோ மூன் இணைந்துதான் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'புளு மைக்ரோ மூன்' ஏற்படுகிறது.

அதாவ்துஸ் சந்திரன், புவிக்கு மிக நீண்ட தூரத்தில் இருக்கும்போது,ம் ஒரு மாதத்தில் வரும் 2ஆவது பௌர்ணமி நாள்தான் புளு மைக்ரோமூன்.

முன்னதாக, 1999 அக். 31 ஆம் தேதியில் இந்த புளு மைக்ரோ மூன் தோன்றியது.

- IANS

நீல நிறத்தில் தெரியுமா?

'புளு மூன்' என்பதால் இது நீல நிறத்தில் இருக்கும் என்று அர்த்தமில்லை. ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது பௌர்ணமி நிலவைக் குறிப்பிட மட்டுமே இந்த பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

வெளிறிய வெள்ளை அல்லது பொன்னிற - ஆரஞ்சு நிறத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது. புவியின் வளிமண்டலம் ஒளியைச் சிதறடிப்பதன் மூலமாக இந்த நிறம் உண்டாகிறது.

புளு மூன் என்பது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சந்திரன் புவிக்கு மிக நீண்ட தொலைவில் செல்ல 27 ஆண்டுகள் ஆகும் என்பதால் இது அரிய நிகழ்வாகும்.

எப்போது பார்க்கலாம்?

உலகின் பல்வேறு பகுதிகளில் மே 31 ஆம் தேதி மாலையில் நிலா உதயமாகத் தொடங்கும்போது இந்த நிகழ்வைக் காண முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வானிலை மேகமூட்டம் இன்றி தெளிவாக இருந்தால், வெறும் கண்களாலேயே இதனைப் பார்க்க முடியும். இதற்கு தொலைநோக்கி எதுவும் தேவையில்லை.

நிலவு உதயமாகும்போது பெரிதாகவும், பொன்னிற - ஆரஞ்சு நிற ஒளியுடனும் நிலா காட்சியளிக்கும். பின்னர் வானில் மேலே எழும்பும்போது படிப்படியாகத் தனது வழக்கமான, பிரகாசமான வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும்.

இந்தியாவில்...

ஆசிய பசிபிக் பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் மே 30 மாலை / இரவில் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.

ஆனால், சென்னை பிர்லா கோளரங்கத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் எஸ். சௌந்தர்ராஜ பெருமாள், 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இன்று(மே 31) சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிழக்கு வானத்தில் புளு மைக்ரோமூன் தெரியும்' என்று கூறியுள்ளார்.

மேலும், நிலா வழக்கத்தைவிட சிறிதாகவும் மங்கலாகவும் இருக்கும் என்பதால் பெரிதாக வித்தியாசத்தை தெரிந்துகொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டின் முக்கியமான, அதிசயமான வான் காட்சியாக இது இருக்கும்.

உலகில் சில பகுதிகளில் இதேபோன்றதொரு அரிய புளு மைக்ரோ மூன் நிகழ்வு 2053 ஆம் ஆண்டில்தான் நிகழும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த அரிய நிகழ்வைத் தவறவிட வேண்டாம் என்று வானியல் ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Blue mirco Moon on May 31: Will this rare lunar event be visible in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments