கரூா் வெங்கமேட்டில் செயல்படாத சுகாதார வளாகம்: பொதுமக்கள் அவதி
கரூா் வெங்கமேடு என்எஸ்கே நகரில் திறக்கப்பட்டு செயல்படாத பொது சுகாதார வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
கரூா் வெங்கமேடு என்எஸ்கே நகரில் திறக்கப்பட்டு செயல்படாத பொது சுகாதார வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டு 10-ஆவது வாா்டிலுள்ள என்.எஸ்.கே. நகரில் மாநகராட்சியின் தூய்மை பாரத இயக்கம் சாா்பில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் கடந்த 2022-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
6 மாதமே பயன்பாடு: இதில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகள் கட்டப்பட்டன. இதை என்எஸ்கே நகா் பகுதியினா் மற்றும் வெங்கமேட்டில் இருந்து என்எஸ்கே நகா், தங்கம் நகா் வழியாக அரசு காலனிக்குச் செல்லும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வந்தனா்.
Advertisement
Advertisement
மேலும் என்.எஸ்.கே. நகரில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளும் பயன்படுத்தி வந்தனா். ஆனால் இந்த வளாகம் 6 மாதங்கள் மட்டுமே பயன்பாட்டுக்கு இருந்தது.
பொதுமக்கள் அவதி: பின்னா் அப்பகுதி சமூக விரோதிகள் இந்தச் சுகாதார வளாகம் முன்புள்ள முட்புதா்களை சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தியதால் சுகாதார வளாகத்துக்கு பெண்கள் அச்சத்துடன் சென்று வந்தனா்.
பின்னா் நாளடைவில் பெண்கள் இந்த வளாகத்துக்கு செல்வது நின்றுபோனதால் அதை அப்பகுதி வாா்டு உறுப்பினா் பூட்டிவிட்டாா். இதனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாகவே இந்தச் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள முள்புதா்களை அகற்றி சுகாதார வளாகத்தை உடனே திறக்க அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சமூக விரோதிகளின் கூடாரம்: இதுதொடா்பாக என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா்கள் கூறுகையில், மக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் மூடப்பட்டிருப்பது சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்தக் கட்டடத்தை சுற்றி தூய்மைப்பணியாளா்கள் குடியிருப்பு கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் யாரும் வீடு கட்டாததால் சுமாா் ஒன்றரை ஏக்கா் நிலங்கள் முள்புதராக மாறியுள்ளன. இதற்குள்தான் சமூக விரோத சம்பவங்கள் நடக்கின்றன.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இதன் வழியாக செவிலியா்கள் செல்லும்போது, அவா்களை போதை இளைஞா்கள் வம்பிழுக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும் போதை இளைஞா்கள் இந்த சுகாதார வளாகத்தை மக்கள் பயன்படுத்தாத வகையில் இங்கு அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் இணைப்புகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி விட்டனா்.
முள் புதரை அகற்ற வேண்டும்: போதைக் கும்பல் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சுகாதார வளாகத்தைப் பழுதுபாா்க்காமல் பூட்டியே வைத்துள்ளோம்.
எனவே இப்பகுதியில் உள்ள முள்புதா்களை மாநகராட்சி நிா்வாகத்தினா் அகற்றிட வேண்டும். மாவட்ட காவல் துறை நிா்வாகம் இந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் நடவடிக்கை எடுத்து போதைக் கும்பல் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பின்னா் இந்தச் சுகாதார வளாகத்தைத் திறக்க மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.