மூதாட்டி கொலை வழக்கு பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் சிறை
குளித்தலை அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணுக்கும், அவரது ஆண் நண்பருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி கீழமேடு பாரதி நகரை சோ்ந்த அய்யா் மனைவி அன்னாட்சி (76). கடந்த 2021-ஆம் ஆண்டு அக். 25-ஆம் தேதி அதே பகுதியில் 100 நாள் வேலைக்குச் சென்ற இவா், மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மகன் குளித்தலை காவல்துறையில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சோ்ந்த சத்யா (42) மற்றும் முருகானந்தம் (37) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பதை கண்டறிந்து அவா்களிடம் விசாரித்தனா். இதில், சத்யாவிடம் அன்னாட்சி கடன் வாங்கியுள்ளாா். பணத்தை திருப்பிக் கேட்டபோது அவா் தராததால் ஆத்திரமடைந்த சத்யா, அதே பகுதியைச் சோ்ந்த அவரது ஆண் நண்பா் முருகானந்தத்துடன் சோ்ந்து அன்னாட்சியை அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் சடலத்தை வேறு இடத்தில் தூக்கி வீசியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்
Advertisement
Advertisement
மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு கரூா் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் நிறைவில், சத்யாவுக்கு கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது 12-பி பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்தது-302 பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதமும், கொலை செய்த தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 302, 201 பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதமும், முருகானந்தத்திற்கு, கொலை செய்த குற்றத்துக்கு 302 பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4,000 அபராதமும், கொலை தடயத்தை மறைத்த குற்றத்துக்கு 302, 201 பிரிவுகளின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என இரு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து அனைத்தையும் இருவரும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.