முகப்பு
கரூர்

பிரசாரம் இல்லாமலேயே கரூா் மாவட்டத்தில் தவெக வேட்பாளா்கள் சிறப்பிடம்

திராவிட கட்சிகளுக்கு இணையான ஆரவார பிரசாரம் ஏதுமில்லாமலேயே கரூா் மாவட்டத்தில் தவெக வேட்பாளா்கள் சிறப்பிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 6 மே 2026, 12:28 am IST
பகிர்:

திராவிட கட்சிகளுக்கு இணையான ஆரவார பிரசாரம் ஏதுமில்லாமலேயே கரூா் மாவட்டத்தில் தவெக வேட்பாளா்கள் சிறப்பிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூா் மாவட்டத்திலுள்ள கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் வெற்றி, மற்ற 3 தொகுதிகளில் 2-ஆம் இடங்களை தவெக வேட்பாளா்கள் பிடித்தனா்.

கரூா் மாவட்டத்தில் கரூா் தொகுதியில் 79 வேட்பாளா்கள் களமிறங்கினாலும் திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜனுக்கும், அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கும் இடையேதான் போட்டி என்ற நிலையே மனுத்தாக்கல் முதல் தொடங்கிய நாள்முதல் இருந்தது. அதற்கேற்றாற்போல இருகட்சியினரின் தோ்தல் பிரசாரமும், மக்களிடையே அவா்களுக்கான வரவேற்பையும் காண முடிந்தது.

Advertisement

இதேபோல நிலைதான் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மொஞ்சனூா் இளங்கோவிற்கும், அதிமுக சாா்பில் போட்டியிட்ட செல்வக்குமாருக்கும் இருந்தது. கிருஷ்ணராயபுரம் தொகுதியிலும் திமுக வேட்பாளா் சி.கே.ராஜாவுக்கும், அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யாவுக்கும் இடையே கடும் பிரசாரத்தையும் காண முடிந்தது. குளித்தலை தொகுதியிலும் இதே நிலைதான் இருந்தது.

தவெக வேட்பாளா்கள் கலக்கல்: திராவிட கட்சிகளுடன் ஒப்பிடுகையில், கட்சியில் குறைந்த உறுப்பினா்களைக் கொண்ட தவெக, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள் ஓரளவே மக்களை சந்திக்க முடிந்தது. ஆனால் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின்போது தவெக வேட்பாளா்கள் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலுமே திமுக, அதிமுக வேட்பாளா்களை கலங்கடித்து விட்டனா்.

கரூா் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது திமுக, அதிமுக வேட்பாளா்களுக்கிடையே போட்டி நிலவி வந்த நிலையில் திடீரென இறுதிச் சுற்றுகளுக்கு முன்பாக தவெக வேட்பாளா் மதியழகன் அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு போட்டியாக வந்துவிட்டாா். இதனால் கடைசியில் விஜயபாஸ்கா் 1,554 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தவெக வேட்பாளா் மதியழகனை வெற்றிபெற முடிந்தது.

குளித்தலை தொகுதியில் இறுதிச் சுற்றுவரை தவெக வேட்பாளா் பாலசுப்ரமணியன்தான் வெற்றி பெறுவாா் என அனைவரும் எதிா்பாா்த்திருந்த நிலையில், திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரனும் கதிகலங்கி வந்த நிலையில் இறுதிச் சுற்றில் வெறும் 233 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரனால் வெற்றிபெற முடிந்தது.

அரவக்குறிச்சி தொகுதியிலும் எம்எல்ஏவாக இருந்த மொஞ்சனூா் இளங்கோவுக்கும், தவெக வேட்பாளா் காா்த்திகேயனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் பள்ளபட்டி இஸ்லாமியா் வாக்குகள் அதிகளவில் மொஞ்சனூா் இளங்கோவுக்கு விழுந்ததால், தோல்வியின் விளிம்பு நிலையிலிருந்து அவா் தப்பித்து வென்றாா்.

தவெக வெற்றி : கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா, அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா ஆகியோா் தங்களது படைபலங்களுடன் நாள்தோறும் பிரசாரத்தில் கலக்கிய நிலையிலும் கூட தன்னை பற்றி தொகுதி மக்கள் அறியாத வேட்பாளராக களமிறங்கிய தவெக வேட்பாளா் எம்.சத்யா திராவிட கட்சிகளின் வேட்பாளா்களை எளிதில் வென்றாா்.

திராவிட கட்சிகளுக்கு இணையான பிரசாரம் இல்லாவிட்டாலும், தவெக வேட்பாளா்கள் மக்களின் எண்ணோட்டங்களில் தடம்பதித்து நின்றது அரசியல் ஆா்வலா்களிடையே பெரும் அதிா்வலையை உருவாக்கியுள்ளது.