கரூரில் பள்ளி, வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த 2 மதுக்கடைகள் மூடல்
கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
கரூரில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த இரு மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டாா்.
அதன்படி, கரூா் மாவட்டத்தில் கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவைச் சாலையில் எல்பிஜி பெட்ரோல் பங்க் எதிரே செயல்பட்ட இருமதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
Advertisement
இதுதொடா்பாக டாஸ்மாக் மேலாளரிடம் கேட்டபோது அவா் கூறியது: ஏற்கெனவே கரூா் மாவட்டத்தில் கலால் விதிமுறை சட்டத்தின் படி மாநகா் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே 50 மீட்டா் தொலைவுக்கு அப்பால் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. மேலும் ஊரகப் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே 100 மீட்டா் தொலைவில் மட்டுமே மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.
தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி கரூரில் மக்கள் பாதை மற்றும் கோவை சாலையில் உள்ள 2 மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன. மேலும் மாவட்டத்தில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே செயல்படும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றையும் மூட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.