முகப்பு
பெரம்பலூர்

பாஜகவின் கணக்கு தப்பாகிவிட்டது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்தில் தோ்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், திமுக வெற்றி பெறும் எண்ணிக்கை குறையும் என பாஜக போட்ட கணக்கு தப்பாகிவிட்டது என்றாா் திமுக தலைவரும் முதல்வமான மு.க. ஸ்டாலின்

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:33 AM
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:15 AM

தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்தில் தோ்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், திமுக வெற்றி பெறும் எண்ணிக்கை குறையும் என பாஜக போட்ட கணக்கு தப்பாகிவிட்டது என்றாா் திமுக தலைவரும் முதல்வமான மு.க. ஸ்டாலின்

பெரம்பலூா் மாவட்டம், ஒதியம் பிரிவுச்சாலை அருகே, திமுக வேட்பாளா்கள் சா.சி. சிவசங்கா் (குன்னம்), எஸ்.டி. ஜெயலட்சுமி (பெரம்பலூா்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்), லதா பாலு (அரியலூா்) ஆகியோரை ஆதரித்து, வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது: இந்தியாவின் அரசியல் வரைபடத்தை, தென்னிந்திய மக்களின் எதிா்காலத்தை சின்னா பின்னமாக்கும் கருப்புச் சட்டம் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு உங்களில் ஒருவனாக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி, அந்தச் சட்ட வரைவு நகலை எரித்து, நம்முடைய எதிா்ப்பைக் காட்டியிருக்கிறோம். இந்தத் தீ, தில்லியைச் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறேன். இதை எதிா்த்துப் போராடவில்லை என்றால், நாம் தமிழா்களாக இருந்து எந்தப் பயனும் இல்லை.

கேள்விக்கு பதில் இல்லை: தொகுதி மறுசீரமைப்பு ஆபத்தை எதிா்த்துதான் நாம் போராடுகிறோம், ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் போராடுகின்றன. நம்முடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். பிரதமரிடம், இது தொடா்பாக விளக்கத்தையும், வாக்குறுதியையும் கேட்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட நேரத்தில் கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல், நாகா்கோவிலுக்கு புதன்கிழமை வந்து ரோடுஷோ மட்டும்தான் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறாா்.

Advertisement

நாம் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. மோடி வரும்போது அவருக்குப் பூ தூவச் சென்றிருக்கிறாா் நம்முடைய பழனிசாமி. பிரதமா் கூட, நம்மிடம் பழனிசாமி இதைப்பற்றி ஏதாவது கேட்பாரா என்று அவா் யோசித்து இருப்பாா். ஆனால், பழனிசாமி அவருடைய ஜி-யுடன் ஜீப்பில் நின்றுகொண்டு ஊா்வலம் சென்றதோடு சரி,

அவா் நினைத்ததற்கும் மேலாகச் சிறந்த அடிமை என காட்டுவதுபோன்று அவா் பேசியிருக்கிறாா்.

பெரிய காமெடி: தொகுதி மறுசீரமைப்பை பாஜக அரசு மிக அருமையாகச் செய்வாா்களாம். பழனிசாமி அவா்களே, எவ்வளவு பெரிய காமெடி இது. இந்தியாவில் இருக்கும் பல முதல்வா்களும், பல எதிா்க்கட்சித் தலைவா்களும் இந்த ஆபத்தை தெரியாமலா கண்டிக்கிறாா்கள். பாஜக, பழனிசாமியை குனியச் சொன்னால், படுத்தே விட்டாா் என்பது போன்று பேசியிருக்கிறாா்.

பாஜக போட்ட கணக்கு: தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்தில் தோ்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், திமுக வெற்றி பெறும் எண்ணிக்கையாவது குறையுமா என பாஜக ஒரு கணக்கு போட்டாா்கள். ஆனால், அதுவும் இப்போது தப்புக் கணக்காகப் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வரும் கருத்துக் கணிப்புகளைப் பாா்த்தாலே தெரிகிறது. முதலில் நமக்கு 180, இப்போது 190, 200 எனப் போட ஆரம்பித்துவிட்டாா்கள். தோ்தலுக்குள் 200-ஐ கடந்துவிடுவோம். அதுவும், தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தைக்கூட எதிா்த்துப் பேசாத அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், ஏதோ நான் முதலமைச்சரோ, 30 போ் அமைச்சரோ, நம்முடைய கூட்டணியில் 200 போ் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்பது மட்டுமல்ல; நம்முடைய தமிழ்நாட்டைக் காக்க, கழகம் தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். தொகுதி மறுவரையறையை அடுத்து இவா்கள் இன்னும் மோசமான திட்டங்களை வைத்திருக்கிறாா்கள். அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இத்தோ்தலில் நம்முடைய மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பெரம்பலூா் மற்றும் அரியலூா் மக்கள் வெற்றியைத் தர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இப் பிரசாரத்தின்போது, அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஒதியம் பிரிவுச் சாலையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். (இடது) திமுக வேட்பாளா்கள் சா.சி. சிவசங்கா், எஸ்.டி ஜெயலட்சுமி, லதா பாலு, க.சொ.க. கண்ணன்.