தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்குகிறது: மு.க. ஸ்டாலின் பேச்சு
தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்குகிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் பேசியிருப்பது குறித்து...
தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்குகிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இல்ல திருமண விழா, திங்கள்கிழமை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர் திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
திமுக மக்களுக்கான தொண்டன்
தேர்தல் தோல்விகளை கண்டு திமுக சிதறாது. யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வெற்றி, தோல்வி என்பதைச் சமமாகக் கருதிப் பாடுபட்டுக் கொண்டிருக்கக் கூடிய தொண்டன்தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ இன்றைக்கு நடந்து முடிந்திருக்கக் கூடிய தேர்தலிலே நாம் தோற்றுவிட்டது மாதிரி, ஏதோ படுதோல்வி அடைந்துவிட்டது மாதிரி, இதோடு திமுக கதை முடிந்துவிட்டது என்று கவிதை அரங்கேற்றுவதற்கு கூட முன் வந்திருக்கிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறார்கள்.
திமுக பீனிக்ஸ் பறவை
ஆனால், திமுக தொடங்கியதில் இருந்து பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளன. திமுகவை பொறுத்தவரைக்கும் எத்தனையோ தேர்தலைப் பார்த்திருக்கிறோம். 1952 இல் நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 1957, 1962, 1967, 1971-களில் நடைபெற்ற தேர்தல்களில் பல வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஆனால், நமது கட்சி தோல்வி அடைந்தபோதெல்லாம் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்து வந்துள்ளது என்பதுதான் நமது வரலாறு.
இன்றும் திராவிட மாடல் ஆட்சிதான்!
இங்கே கூட பேசியவர்கள் எல்லாம் ஏதோ சோகத்தில் இருப்பது போல நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, இந்த மேடையில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, எதிரே இருக்கக்கூடியவர்கள் கூட ஏதோ சோகமாக இருப்பதாகக் காட்சித் தருகிறீர்கள். நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறோம்.
நம்முடைய திட்டங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பு தந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, நெசவாளர்களுக்கு, தொழிலாளர் தோழர்களுக்கு, அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மாணவர்களுக்கு, மாணவியர்களுக்கு, பெண்களுக்கு, மகளிருக்கு, ஆசிரியர்களுக்கு இப்படி எல்லாத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்துவிட முடியாது.
நாம் வெற்றி வாய்ப்பை இழந்து புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது, புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு நான் வாழ்த்து சொன்னேன், நீங்கள் படிச்சிருப்பீங்க, அந்த அறிக்கையைப் படிச்சிருப்பீங்க. வாழ்த்துச் சொல்லுகிற போது சொன்னேன், புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கக் கூடியவர்களுக்கு வாழ்த்துகள், ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நாம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஒரு கோரிக்கையாக வைத்தேன். ஆக நாம் வைத்திருக்கிற கோரிக்கை, இன்றைக்கு அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு கண்கூடாகப் பார்க்கிறோம். அதையேதான் சொன்னேன், நாம் தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.
நான் தேர்தல் நேரத்தில் சொன்னேன், இந்தத் திட்டம் இருக்கிற வரைக்கும், நாம் பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்திருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிட முடியாது. ஆக, நம் திட்டங்கள் தொடரும்வரை திமுகதான் ஆட்சியில் இருக்கிறது என்று அர்த்தம். முந்தைய திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவை தொடர்கின்றன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நடக்கிறது. இந்த திட்டங்களை யாராலும் மாற்றவிடவோ, தடுத்துவிடவோ முடியாது.
‘உடன்பிறப்பே வா’
இந்தத் தேர்தலின் தோல்வியைப் பார்த்து நான் சிதறவில்லை, மனம் சோர்வடையவில்லை. 234 தொகுதிகளில் இன்றைக்கு என்ன நிலை?, எப்படி வெற்றி பெற்றிருக்காங்க?, எப்படி வெற்றி வாய்ப்பு இழந்திருக்கிறோம்?, என்ன காரணம்? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக நான் ஒரு குழுவை நியமித்திருக்கிறேன். 86 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, 234 தொகுதிக்கும் இன்றிலிருந்து அந்த குழு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடக்க உள்ளது.
அந்த ஆய்வின்போது நம்மிடத்தில் என்ன குறை?, நம்மிடத்தில் என்ன பிரச்னை?, மற்றவர்கள் என்ன செஞ்சிருக்காங்க?, எது விட்டுப்போயிருக்கு? ஏன் இந்தத் தோல்வி நடந்திருக்கு?, ஏன் இந்தத் தொகுதியில வெற்றி பெற்றிருக்கோம்?, இந்தத் தொகுதியில வெற்றி பெறல? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கு.
அந்த குழு மட்டுமல்ல, ‘உடன்பிறப்பே வா’என்ற தலைப்புல ஒரு இணையதளமும் தொடங்கியிருக்கிறோம். ஆக, அந்த இணையதளத்தில் திமுகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களோ, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களோ அதில் தங்களுடைய கருத்துகளை வெளியிடலாம்
இந்தத் தேர்தலைப் பற்றி இன்னும் சொல்லணும்னா, நம்முடைய கட்சி என்பது ஒரு கட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய கட்சி. நாடாளுமன்றத் தேர்தல் முடிஞ்சதுக்குப் பிறகு நாம் நம்முடைய பேரவைத் தேர்தல் பணியைத் தொடங்கினோம்.
பகுதி வாரியாக முகவர் நியமிச்சோம், பூத் கமிட்டி அமைச்சோம். ‘ஒன்றிணைவோம் வா’ என்ற தலைப்பில திமுக உறுப்பினர்களைச் சேர்க்கக்கூடிய அந்தப் பணியைத் தொடங்கினோம். அதற்குப் பிறகு இளைஞர் அணி, மகளிர் அணி மண்டல மாநாடுகள் நடத்தினோம், ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களை நியமித்தோம், மண்டல அளவிலே அதற்கும் சில பொறுப்பாளர்களைப் போட்டோம். இவ்வளவு பணிகளையும் செஞ்சு ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியல? ஆனா, எந்தப் பணியும் செய்யாமல், மக்களைச் சந்திக்காமல், பாக முகவர் நியமிக்கவில்லை, பூத் கமிட்டி அமைக்கல, இன்னும் சொல்லணும்னா கவுண்டிங் முகவர் கூட பல இடங்கள்ல நியமிக்கல. அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்காங்க. அது தவறில்லை, ஆனா அதுல என்ன இருக்கு என்பதுதான்..
இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது
சமூக வலைதளங்களை குறிப்பாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி மட்டுமே ரொம்ப சுலபமாக தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. சிறு பிள்ளைகளை, குழந்தைகளை் பிரசாரம் செய்ய வைத்து, அவர்களை அவர்களுடைய தாத்தா, பாட்டி, அப்பா், அம்மா, அவங்க வீட்ல இருக்கக்கூடிய பெரியவர்களிடம் அந்த குழந்தைகள் மூலமாக பிரசாரங்களை முன்னெடுத்து, ஒரு திட்டமிட்ட பிரசாரத்தைக் கொடுத்திருக்காங்க. ஆக, அது நம்முடைய கணக்குக்குத் தெரியாமப் போய்விட்டது. ஆனா, இனிமேல் நாம் உஷாரா இருந்து அதையும் முறியடிக்கக்கூடிய வகையில அந்தப் பணியை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். எனவே, நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கட்சி உங்களுக்கு இருக்கு, இயக்கம் இருக்கு, நாங்கள் இருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.
இன்னும் பல பணிகள் நிறைவேற்ற வேண்டியது இருக்கு
எனக்கிருக்கக்கூடிய கவலையெல்லாம் ஐந்து ஆண்டுகள் நிறைவேற்றிய திட்டப் பணிகள் போதாது, இன்னும் பல பணிகள் நிறைவேற்ற வேண்டியது இருக்கும். இன்னும் ஐந்து ஆண்டு காலம் நமக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னும் பல பணிகள் நிறைவேற்றி இருப்போம். அது தடைபட்டுப் போய் இருக்கிறது. அதை எப்படியாவது நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட, இன்றைக்கு நாம் மக்களிடத்திலே போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உறுதியோடு எடுத்துச் சொல்லக்கூடிய வகையில நம்முடைய கடமையை ஆற்றுவோம். பெற்றோர்கள், குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்குகிறது என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.