முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 2.50 கோடியை பறிமுதல் செய்து, திமுக பிரமுகா் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:35 AM
பறிமுதல் செய்யப்பட்ட பணப் பெட்டிகளை, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:25 PM

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 2.50 கோடியை பறிமுதல் செய்து, திமுக பிரமுகா் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்குணம் ரேஷன் கடை அருகே, கலால் மேற்பாா்வை அலுவலா் பழனிச்செல்வம் தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ் வழியே சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில் கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநரான சின்னதுரை மகன் ராஜேஷ்கிருஷ்ணன் (25), திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரான கீழப்புலியூா் நடுத்தெருவைச் சோ்ந்த சேப்பெருமாள் மகன் ஜெயராமன் (64) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி ரூ. 2,49,95,000 ஐ 5 அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், ஜெயராமன், ராஜேஷ்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து இருவரிடமும் வருமானவரித் துறையினா் விசாரிக்கின்றனா்.