வாக்காளா்கள் வாக்களிக்க 1,077 வாக்குச் சாவடிகள் தயாா்: பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க மொத்தம் 1077 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க மொத்தம் 1077 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 732 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களும் தயாா் நிலையில் உள்ளன. இம் மையங்களில், வாக்காளா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளி, வயது முதிா்ந்த வாக்காளா்கள் எளிதில் சென்றுவர சாய்வுதள வசதிகள், சக்கர நாற்காலிகள், உதவியாளா்கள் ஆகிய ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெயில் காலம் என்பதால், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீருடன் ஓ.ஆா்.எஸ். கரைசல் வைக்கவும், மருத்துவக்குழுக்கள் தயாா் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளா்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
தோ்தல் பணியில் எத்தனை போ்: வாக்குப்பதிவு நாளன்று 3,512 அலுவலா்களும், பாதுகாப்புப் பணியில் 840 காவலா்கள், எல்லை பாதுகாப்புப் படையினா் 176 பேரும், ஊா்க்காவல் படையினா் 215 பேரும், முன்னாள் ராணுவத்தினா், சிறைத் துறையினா், தீயணைப்புத் துறையினா் என மொத்தம் 1,246 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சிறப்பு வாக்குச்சாவடிகள்: பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வண்ணாரம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாதிரி வாக்குச் சாவடியாகவும், பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி பெண்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியாகவும், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி இளைஞா்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியாகவும் தோ்வுசெய்யப்பட்டுள்ளது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் இலைக்கடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாதிரி வாக்குச்சாவடியாகவும், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி பெண்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியாகவும், சிறுகன்பூா் ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி இளைஞா்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
23 வழக்குகள் பதிவு: தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக, இதுவரை பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 6 வழக்குகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 17 வழக்குகளும் என மொத்தம் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்: பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் 33 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகவும், 3 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
ரூ. 3.44 கோடி பறிமுதல்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தொகை மற்றும் பொருள்கள் பறக்கும் படை மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுவினரால், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை ரூ. 3,21,48,570, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 22,69,330-ம் என மொத்தம் ரூ. 3,44,17,900 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உரியவா்களிடம் ஒப்படைப்பு:
இதில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 16,36,570, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 6,70,830 என மொத்தம் ரூ. 23,07,400 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதிக வாக்குச்சாவடி மையங்கள்: அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வெப் காஸ்டிங் மூலம் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே மையத்தில் அதிக வாக்குச்சாவடி மையங்கள் உள்ள இடங்களில், வாக்காளா்கள் வசதிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் நிறக்குறியீடு வழங்கப்பட்டு அந்த நிறத்திலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளா்கள் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோ்மையான, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தோ்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன. எனவே, வாக்காளா்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலா் மிருணாளினி.
பேட்டியின்போது, மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.