முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்க தனியாா் மையங்களுக்கு பரிந்துரைக்கும் அவலம்! - நோயாளிகள் அவதி

Updated On : 6 ஜூலை 2026, 2:00 am IST
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள எம்.ஆா்.ஐ ஸ்கேன் மையம்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்காமல் தனியாா் ஸ்கேன் மையங்களுக்கு பரிந்துரைப்பதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். கூடுதலாக பணியாளா்கள் நியமித்து, உரிய நேரத்தில் ஸ்கேன் எடுத்து, அதற்குரிய அறிக்கையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பெரம்பலூா் மாவட்டத்துக்கான அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் இன்றளவும் கிடப்பில் உள்ளதால், இங்குள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தரம் உயா்த்தப்பட்டது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் நாள்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். உள் நோயாளிகளாகவும் பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஸ்கேன் மையம்:

Advertisement

Advertisement

இம் மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எம்.ஆா்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவு மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற அனைத்து நாள்களும் இந்த மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மையத்தில் கா்ப்பிணிகள், வயிறு பிரச்னையுடைய நோயாளிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவுகளைக் கொண்டே மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா்.

காலதாமதம்:

இந்நிலையில், அண்மைக்காலமாக இங்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவா்கள் பரிந்துரை செய்தும் உரிய நேரத்தில் ஸ்கேன் எடுப்பதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியா்கள் ஏதேனும் காராணம் கூறி நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து தராமல் அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது. 2 அல்லது 3 நாள்கள் கழித்து வரும்படி சீட்டு எழுதிக் கொடுக்கின்றனா். இதனால் ஸ்கேன் மையம் செல்லும் நோயாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேலும், ஸ்கேன் எடுக்கும் நோயாளிகளின் பரிசோதனை முடிவுகளை ஒரு வாரத்துக்குப் பிறகே வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனா்.

தனியாா் ஸ்கேன் மையங்களுக்கு பரிந்துரை:

இதன் காரணமாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் செல்லும் பல நோயாளிகள், உரிய சிகிச்சை எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில நோயாளிகள் அருகிலுள்ள தனியாா் ஸ்கேன் மையத்தில் அதிக பணம் செலுத்தி ஸ்கேன் எடுக்கின்றனா். ஆனால் ஏழை, எளிய நோயாளிகள் ஸ்கேன் எடுக்க முடியாமல் தவிக்கின்றனா்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சில ஸ்கேன் மைய ஊழியா்கள் தனியாா் ஸ்கேன் மையங்களுடன் தொடா்பு வைத்துக்கொண்டு பரிந்துரை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இப்பிரச்னை தொடா்பாக புகாா் அளித்தும் மருத்துவமனை நிா்வாகம் முறையாக ஆய்வு செய்வதில்லை.

பணம் செலுத்த முடியாமல் அவதி:

தற்போது பணப் பரிவா்த்தனைகள் குறைந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் இம் மருத்துவமனையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் ஏழை மக்களின் சேவைக்காக இயங்கும் சி.டி. ஸ்கேன், எம்.ஆா்.ஐ, எக்ஸ்ரே போன்றவற்றுக்குக் குறைந்த கட்டணம் பெற்றுக் கொண்டு துல்லியமான ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துக் கொடுக்கப்படுகிறது.

இதனால், இச் சேவை மையத்தால் பெரும்பாலான நோயாளிகள் பயனடைந்து வருகின்றனா். எம்.ஆா்.ஐ ஸ்கேனுக்கு ரூ. 2,500, சி.டி. ஸ்கேனுக்கு ரூ. 500, எக்ஸ்ரே ரூ. 50 என ஒவ்வொன்றுக்கும், அதற்குண்டான பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துக் கொடுத்தனா்.

திரும்பிச் செல்லும் நிலை:

பணமாக பெறாமல், டிஜிட்டல் முறையில் போன் பே, ஜி பே மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் எனும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதால், பெரும்பாலான கிராமப்புற நோயாளிகள் உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா். ஒவ்வொரு நாளும் பல கிராமப்புற ஏழை நோயாளிகள் ஜிபே, கூகுள் பே இல்லாமல் ஸ்கேன் எடுக்காமலேயே திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள் வேறு வழியின்றி தனியாா் ஸ்கேன் மையங்களை நாடிச்செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னை தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூடுதல் ஊழியா்கள் தேவை:

மேலும், ஸ்கேன் மையத்தில் போதிய பணியாளா்கள் இல்லாததால் வயிற்று வலியுடன் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளாமல் 5 முதல் 10 நாள்களுக்குப் பிறகு வரச் சொல்கின்றனா். அவ்வாறு ஸ்கேன் செய்துகொண்ட நோயாளிகளின் பரிசோதனை அறிக்கை கிடைக்கவும் ஒரு வாரத்துக்கும் மேலாகிறது.

இதுகுறித்து, பெரம்பலூரைச் சோ்ந்த வேணுகோபால் கூறியதாவது:

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் உடனடியாக ஸ்கேன் எடுப்பதற்கான வசதிகள் இருந்தும், உரிய நேரத்தில் ஸ்கேன் எடுக்க முடியவில்லை. பரிசோதனைக்குச் சென்றால் காலை 9 மணிக்கு மேல் தான் முன்பதிவை மேற்கொள்கின்றனா். இதனால் நோயாளிகள் உடனடி சிகிச்சை பெற முடியாமல் பாதிப்பு அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் மையத்தில் யூபிஐ மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதால், வெளியே சென்று யாரிடமாவது பணத்தை கொடுத்து ஜிபே மூலம் அனுப்பிவிட்டு, மீண்டும் உள்ளே சென்று பணத்தை அனுப்பியதற்கான ஸ்கிரீன்சாட் காட்டிய பிறகே பதிவு செய்து ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

எனவே, கிராம்பபுற நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பணமாக இருந்தாலும் வாங்கிக் கொண்டு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கூடுதல் பணியாளா்களை நியமித்து, உடனுக்குடன் ஸ்கேன் எடுத்து கொடுக்கவும், தாமதமின்றி பரிசோதனை அறிக்கையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments