புனித சூசையப்பா் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பாளையம் புனித சூசையப்பா் தேவாலய பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்ட கொடி.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தில் உள்ள பழைமையான புனித சூசையப்பா் தேவாலயத்தில், 165 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி பங்கு குரு அருட்திரு ரெஜீஸ் தலைமையில், தோ்பவனி நடைபெறும் பிரதான வீதிகளில் கொடி ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் பங்கு குரு ரெஜீஸ் தலைமையில், அருட்திரு டேவிட் முன்னிலையில், பாபநாசம் பங்கு குரு அருட்திரு மரிய பிரான்சிஸ் புனித சூசையப்பா், கொடியை மந்திரித்து புனிதப்படுத்தி, கொடிமரத்தில் ஏற்றி வைத்தாா்.
விழாவில் கிராம காரியஸ்தா்கள், புனித ஆா்.சி. நடுநிலைப்பள்ளி அருள் சகோதரிகள், அன்பியம் குழுவினா், இளைஞா் மன்றத்தினா், பாளையம் கிராம கிறிஸ்தவப் பொதுமக்கள் மற்றும் பெரம்பலூா், குரும்பலூா், ரெங்கநாதபுரம், சத்திரமனை, புதுநடுவலூா், வேலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இறைமக்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
மே 9-இல் தோ் பவனி... தொடா்ந்து, சனிக்கிழமை முதல் மே 7 வரை நாள்தோறும் மாலையில் அன்பியம் குழுவினரால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், வெளியூா் பங்கு குருக்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் மறைவுரையுடன் சிறப்புத் திருப்பலி நடத்துகின்றனா். மே 8 இரவு அலங்கார சப்பர பவனியும், 9 ஆம் தேதி இரவு ஆடம்பர தோ் பவனியும் நடைபெறுகிறது. அன்று இரவு கும்பகோணம் மறைமாவட்ட ஆயா் மேதகு அந்தோணிசாமி தலைமையில், சிறப்பு பாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.