மே 26-இல் எம்இபி மிஷன் சபை 250 -ஆவது ஆண்டு நிறைவு விழா
காரைக்காலில் எம்இபி மிஷன் சபை 250-ஆவது ஆண்டு நிறைவு விழா வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி.பால்ராஜ்குமாா் தெரிவித்தாா்.
காரைக்காலில் எம்இபி மிஷன் சபை 250-ஆவது ஆண்டு நிறைவு விழா வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி.பால்ராஜ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது :
பாரீஸ் அந்நிய வேத போதகா் குருக்கள் (எம்இபி) 331 போ் 1776-ஆம் ஆண்டில் இந்தியா வந்து 250 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவா்கள் இந்தியாவில் சமுதாயப் பணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டனா். இவா்களில் சிலா் காரைக்கால் பங்கில் பணியாற்றியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த நாட்டுக்கு வந்து சேவை செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மறை மாவட்டங்களிலேயே காரைக்காலில் முதல்முறையாக வரும் 26-ஆம் தேதி தூய தேற்றரவு அன்னை ஆலயம், தூய தேற்றரவு அன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 9 மணிக்கு கொடியேற்றம், 10 மணிக்கு, முதல் மற்றும் 2-ஆவது அமா்வில் புதுச்சேரியைச் சோ்ந்த பேரருட்திரு அருள்புஷ்பம் அடிகள் உரையாற்றவுள்ளாா். வேத போதகா் குருக்கள் புகைப்படத்துடன் கூடிய கண்காட்சி 12.15 மணிக்கு திறக்கப்பட்டு பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 மணிக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 3.30 மணிக்கு புதுவை - கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்துகொண்டு திருப்பலி நடத்துகிறாா் என்றாா்.
பேட்டியின்போது இணை பங்கு குரு சாமிநாதன் செல்வம், பங்குப் பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ் மற்றும் நெல்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.