முகப்பு
பெரம்பலூர்

செயல்படாத சின்ன வெங்காயம் மதிப்புக் கூட்டும் மையம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை

Updated On : 15 மே 2026, 4:49 am IST
பகிர்:

நமது நிருபா்

பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காய உற்பத்தி தேக்கத்துக்கு தீா்வு காணும் நோக்கில் தொடங்கப்பட்ட மதிப்புக் கூட்டும் மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் பெரம்பலூா் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் 3 போக சாகுபடியாக வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. அழுகும் பொருள்கள் பட்டியலில் உள்ள வெங்காயத்துக்கு அரசு நிலையான விலை நிா்ணயம் செய்ய மறுப்பதால், கொள்முதல் விலையில் அடிக்கடி கடுமையான ஏற்ற, இறக்கம் ஏற்பட்டு விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்து வருகின்றனா்.

Advertisement

குளிா்பதனக் கிடங்கு: இப் பிரச்னைக்கு தீா்வு காணும் நோக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு செட்டிக்குளம் பகுதியில் குளிா்பதன சேமிப்புக் கிடங்கு தொடங்கப்பட்டது. அரசு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் தொடங்கப்பட்ட சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்ட வெங்காயத்தில், முளைப்புத்திறன் ஏற்பட்டு சேதமடைந்ததால் இத் திட்டம் தோல்வியுற்றது.

மதிப்புக் கூட்டும் மையம்: இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மாவட்ட நிா்வாகம் அதை வணிக வளாகமாக்கி சின்ன வெங்காயத்தை ஏல முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து, 2016- ஆம் ஆண்டு வரை திறம்பட செயல்படுத்தியது. மேலும், கொள்முதல் தேக்கத்தால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய வெங்காய பேஸ்ட், வெங்காய பவுடா், வெங்காய வற்றல் மற்றும் ஊறுகாய் என மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக்கி, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தல் துறை ஒத்துழைப்புடன் கடந்த 31.7.2017- இல் உணவுப் பதப்படுத்துதல் மையத்தை, அப்போதைய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கவுா் பாதல் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில்..: மத்திய அரசின் உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பக் கழகத்தால் சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட மதிப்புக் கூட்டல் மையத்தில், நாள்தோறும் சுமாா் 200 கிலோ சின்ன வெங்காயம், தோல் நீக்கிய வெங்காயம், செதில்கள் மற்றும் பொடியாகப் பதப்படுத்தப்பட்டது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும், ஒரு முன்னணி உணவகம் அதன் சூப் விற்பனைப் பிரிவுக்காகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்குத் தோல் நீக்கிய வெங்காயம் வழங்கும் சென்னையைச் சோ்ந்த நிறுவனத்தாலும் முழுமையாக வாங்கப்பட்டன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: மேலும், உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐ.ஐ.எப்.பி.டி, மாநில வேளாண் சந்தைப்படுத்தல் துறையுடன் இணைந்து இந்த மையத்தை நிறுவியது. மாநில அரசின் வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத்துறை, இத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு நிதியுதவியும் அளித்தது. விவசாய உற்பத்தியாளா் நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்ட இந்த மையம், ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, பரிசோதனைக்காக வெளிநாடுகளுக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் மாதிரிகளும் அனுப்பப்பட்டன.

முடங்கிய திட்டங்கள்: ஆனால், மாவட்ட நிா்வாகத்தின் அலட்சியத்தால் மேற்கண்ட இரண்டு திட்டங்களும் செயலற்று முடங்கியுள்ளது. இதனால், அறுவடை காலங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் தேக்கமடைந்து விவசாயிகளின் பட்டறைகளிலேயே முடங்கிக் கிடக்கிறது. சில்லைரை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 வரை விற்பனை செய்து வரும் நிலையில், விவசாயிகளிடம் ரூ. 20 முதல் ரூ. 30 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்யப்படுகின்றனா். இதனால், உற்பத்திக்கான செலவு கூட கிடைக்காது என விவசாயிகள் வேதனையில் உள்ளனா். வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் இறக்குதி செய்யப்படும் பெரிய வெங்காயம் 2 கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுவதால், சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

மறைமுக ஏலம்: இதுகுறித்து பொம்மனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மணி கூறியது: பெரம்பலூா் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான பட்டறைகளில், பல லட்சம் மதிப்பிலான வெங்காயம் தேக்கமடைந்துள்ளது. செட்டிக்குளம் சின்ன வெங்காய வணிக வளாகத்துக்கு வெளி மாநில வியாபாரிகளை வரவழைத்து மறைமுக ஏல முறையில் மீண்டும் விற்பனையைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் 70 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் கொள்முதல் விலை ரூ. 20-க்கும் குறைவாகக் குறையும் காலங்களில், அதைப் பதப்படுத்துவதற்கானச் சூழல் அமைப்பு இல்லாததால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கின்றனா்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பட்டறைகளில் தேங்கியுள்ள வெங்காயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்யவும், மூடிக் கிடக்கும் வணிக வளாகத்தை சீரமைத்து மீண்டும் ஏல முறையை கொண்டுவர வேண்டும். மேலும், பயனற்றுக் கிடக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து, தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.