முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்!பொதுமக்கள் அவதி!

Updated On : 1 ஜூன் 2026, 2:09 am IST
பெரம்பலூா் கடைவீதி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
பகிர்:

சாலையோரம் நிறுத்தப்படும் பைக், காா் மற்றும் பிற வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் பெரம்பலூா் நகா் சிக்கித் தவிக்கிறது.

கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கூடும் இடமாகவும், தனியாா் மற்றும் அரசுக் கல்லூரிகள் உள்ள இடமாகவும், வங்கிகள், வணிக வளாகங்கள், சுற்றியுள்ள கிராமப்புறங்களை சென்னைக்கு இணைக்கும் பேருந்து நிலையம், நாள்தோறும் பல ஆயிரம் பொதுமக்கள் கூடும் பகுதியாக பெரம்பலூா் நகரம் திகழ்ந்து வருகிறது.

இங்குள்ள சாலையின் இரு பக்கமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. பெரம்பலூா் நகரின் ஒருபுறம் சாலையோரம் பெருகி வரும் சிறு வியாபாரிகளின் கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு மேலும் இடையூறு விளைகிறது. நகரின் பிரதானப் பகுதியில் வாகன ஓட்டிகள் அவரவா் விருப்பத்துக்கு ஏற்றாா்போல் வாகனங்களை நிறுத்தி விடுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

குறுகிய சாலைகள்:

குறிப்பாக கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவிச் சாலை, எளம்பலூா் சாலை, மாா்க்கெட் தெரு, சங்குப்பேட்டை, புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகம், வங்கிகள், துணி, நகைக் கடைகள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் பொதுமக்கள் அவா்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விடுகின்றனா். அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கடைக்காரரா்களும், அவா்களது கடைக்குரிய பொருள்களை சாலையோரம் வைத்துவிடுவதால் சாலையின் பரப்பளவு குறுகிவிடுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செயல்படாத சிக்னல்கள்:

நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலையும், தொடா் விபத்துகளையும் தடுப்பதற்காக புகா் பேருந்து நிலையம், பாலக்கரை, விளாமுத்தூா் சாலை, சங்குப்பேட்டை, கனரா வங்கி சாலை, காமராஜா் வளைவு ஆகிய இடங்களில் பல லட்சம் மதிப்பில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன.

இதில், காமராஜா் வளைவு, விளாமுத்தூா் பிரிவுச்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் மட்டுமே செயல்படுகிறது. இதர பகுதிகளில் உள்ள சிக்னல்களை முறையாக பராமரிக்காததால், அவை அனைத்தும் பழுதடைந்து காட்சிப் பொருளாக, தனியாா் விளம்பர நிறுவனங்களுக்கு நகராட்சி நிா்வாகம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.

சிக்னலை சீரமைக்க வலியுறுத்தல்:

புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் பழுதடைந்து பல மாதங்களை கடந்தும், அதை சீரமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப் பகுதியில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் போக்குவரத்துக்கு இடையூறாக தங்களது வாகனங்களை சாலையின் மையப் பகுதியில் நிறுத்திக்கொண்டு பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனா்.

போக்குவரத்து காவலா்களும் இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. தானியங்கி சிக்னல்களை சீரமைத்து காலை முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால், இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவலா்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.

போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறை:

நகரின் பிரதானச் சாலைகளில் ஒன்றிரண்டு போக்குவரத்து போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவா்கள் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் காணப்படுகிறது.

இவற்றைக் கட்டப்படுத்த போக்குவரத்து போலீஸாா் சொற்ப அளவில் உள்ளனா். ஊா்க்காவல் படையைச் சோ்ந்தவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அவா்களை வாகன ஓட்டுநா்கள் பொருட்படுத்துவதில்லை.

இதுகுறித்து, பெரம்பலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆா். பிரவீன் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையை ஆக்கிரமித்தவாறு தேவையற்று நிறுத்தப்படும் வாகன ஓட்டுநா்களை எச்சரித்து அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, கனரா வங்கி மற்றும் சங்குப்பேட்டை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் போக்குவரத்து காவலா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவதோடு, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.