புதுக்கோட்டை

பொன்னமராவதி வன்முறை சம்பவத்தின் எதிரொலி: மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைப்பு, 50% பேருந்துகள் இயக்கப்படவில்லை

DIN


ஒரு சமூகத்தினர் குறித்து கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக, புதுகை மாவட்டத்தில் சனிக்கிழமை  50 சதவிகிதப் பேருந்துகளே இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசு மதுபானக் கடைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளரின் சமூகத்தைக் கிண்டல் செய்தும், அந்தச் சமூகத்துப் பெண்களை அவதூறாகப் பேசியும் இரு இளைஞர்கள் கட்செவி அஞ்சலில் ஆடியோ வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட பல கிராமங்களில் வெள்ளிக்கிழமை முதல் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்தச்சூழலில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், சனிக்கிழமை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உத்தரவிட்டிருந்தார். இதன்படி சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் மது விற்பனை இல்லை.
அதேபோல, தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறும் கிராமப் பகுதிகளுக்கான பேருந்துப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 50 சதவிகிதம் மட்டுமே இயக்கப்பட்டன. 
புதுக்கோட்டை பேருந்து நிலையம் சனிக்கிழமை முழுவதும் வெறிச்சோடிக் கிடந்தது. பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பேருந்து கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாயினர். தொடர்ந்து ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ள காவல் துறையினர் கரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் போலீஸாரை வரவழைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
திருச்சி சரக காவல் துணைத் தலைவர் லலிதா லட்சுமி, தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளை மே ற்பார்வையிட்டு வருகின்றனர். 
பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு - இருவர் மீது வழக்கு: புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் வெள்ளிக்கிழமை 3 பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத இருவர் மீது திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆலங்குடி:  வம்பன் 4 சாலை, கறம்பக்குடி, மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, திருவரங்குளம் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மேலும், ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், இப்பகுதிகளில் பெரும்பாலான அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும், இப்பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, ரோந்து பணியையும் போலீஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.  
விராலிமலை: அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலை, காட்டுப்பட்டி, காலாடிப்பட்டி சத்திரம், இலுப்பூர் மேட்டுச்சாலை உள்பட பல பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கரூர் ஏடிஎஸ்பி பாரதி தலைமையில் இலுப்பூர் வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த வேலாடிப்பட்டி, சிவந்தான்பட்டி மற்றும் கந்தர்வகோட்டை பேருந்துநிலையம் எதிரே தஞ்சை  புதுகை சாலையில்  என 3 இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அறந்தாங்கி: அறந்தாங்கி அருகேயுள்ள அரிமளம் வட்டம் ஏம்பல் கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் சி.கோகிலா பேச்சுவார்த்தை நடத்தியதில், மறியல் கைவிடப்பட்டது. 
இதனால் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், அரிமளம் பகுதிகளுக்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
நாகுடி கடைவீதியில் மாலை குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். 
இதேபோல் சுப்பிரமணியபுரத்தில் அண்ணா சிலை அருகே குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT