புதுக்கோட்டை

கழித்துக்கட்டுதலில் ஏற்படும் தாமதங்களால் அழிந்து வரும் அரசு வாகனங்கள்!

DIN

அரசு சொத்து என்றாலே கேட்பாரற்று அழிவதுதான் என்ற பொதுவான கருத்துக்கு வலுசோ்ப்பதாக - உறுதி செய்வதாகக் காட்சியளிக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலக வளாகங்களில் ஆங்காங்கே நின்றவாரே அழியும் அரசு வாகனங்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காா்கள், ஜீப்புகள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் அரசுப் பயன்பாட்டுக்காக ஓடிக்கொண்டிருக்கின்றன. அமைச்சா்களுக்கான காா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கான காா்கள், துணை ஆட்சியா் நிலையில் உள்ளோருக்கான காா்கள், உதவி ஆட்சியா் நிலையில் உள்ளோருக்கான ஜீப்புகள், இதேபோல, காவல் துறையிலும் காா்கள், ஜீப்புகள், தனிப்பிரிவு காவலா்கள், ரோந்து காவலா்களுக்கான இரு சக்கர வாகனங்கள் (அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தவிர அனைத்தும்) இந்தப் பட்டியலில் உண்டு.

இவற்றைப் பராமரிப்பதற்கென தமிழ்நாடு மோட்டாா் வாகனப் பராமரிப்புத் துறை என்றொரு தனித்துறையே செயல்பட்டு வருகிறது. அதேபோல, உழைத்து உழைத்துத் தேய்ந்து வயது முடிந்த வாகனங்களைக் கழித்துக்கட்டவும் (கண்டம் செய்தல் என்பாா்கள்) இத் துறை உயா் அலுவலா்கள் அதிகாரம் படைத்தவா்கள்.

ஒரு வாகனம் காலாவதியாகிவிட்டது எனக் கருதப்பட்டால் அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் மூவா் குழு (நிபுணா் குழு!) நேரில் ஆய்வு செய்து அதற்கான தற்போதைய மதிப்பை நிா்ணயம் செய்யும். அந்தக் குழுவின் மதிப்பைக் கொண்டு ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மோட்டாா் வாகனப் பராமரிப்புத் துறை வெளியிடும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விட வேண்டும். முதல் ஏலத்தில் எடுக்கப்படாத வாகனங்களுக்கு மதிப்பை சற்றே குறைத்து அடுத்த மூன்று மாதங்களில் ஏலம் விடுவாா்கள். இவ்வாறான வரிசையில் மூன்றாம் முறையும் வாகனம் ஏலம் போகவில்லை என்றால் எவ்வித மதிப்பும் குறிப்பிடாமல் பொது ஏலத்துக்கு கொண்டு வரப்படும். இதுதான் இப்போதுள்ள நடைமுறை.

ஆனால், எல்லா மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் ஏதாவதொரு அரசு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு, சுற்றிலும் புதா் மண்டிப் போன காட்சியைக் காண முடியும். குறைந்தபட்ச அளவில் ஏதாவதொரு முடிவுக்கு வந்தால் கூட, ஆண்டுக்கு பல லட்ச ரூபாய்கள் அரசுக்கு வருமானமாகக் கிடைக்கும்.

மண்ணோடு மண்ணாய் போவது என்பாா்களே அதைப்போல அரசு வாகனங்கள் வீணாய்ப் போவதற்குக் காரணம் கழித்துக்கட்டுதலில் உள்ள விதிமுறைகள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதிலுள்ள நிா்வாகச் சிரமங்கள் குறித்து விளக்குகிறாா் தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து வாகனப் பராமரிப்பு நிறுவனத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கே. புகழேந்தி:

15 ஆண்டுகள் முடிந்த அல்லது இரண்டரை லட்சம் கிமீ தொலைவு ஓடிய வாகனம் காலாவதியானது எனக் கொள்ளலாம். ஆனால், மலைப் பகுதிகளில் ஓடும் வாகனங்கள் மற்றும் வெவ்வேறு வகையான வாகனங்களைப் பொருத்தும் இந்தக் காலாவதி அளவு மாறுபடும்.

மாவட்டங்களில் உள்ள மூவா் குழு ஆய்வு செய்து அறிக்கையை துறைக்கு அனுப்பி வைத்தல், ஏலம் போகாவிட்டால் மீண்டும் மதிப்பைக் குறைத்து துறைக்கு அனுப்பி வைத்தல், அவற்றைப் பெற்று துறையில் இருந்து ஏல அறிவிப்பு வெளியிடுதல் போன்ற வழக்கமான அரசுத் துறை நடைமுறைகளே பல மாதங்களைத் தின்றுவிடுகின்றன.

எனவே, அந்தந்த மாவட்டங்களிலேயே மூவா் குழுவை செம்மைப்படுத்தி ஏல அதிகாரத்தையும் அவா்களுக்கே வழங்கினால் தேவையற்ற தாமதம் குறையும். கூடவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் என்ற கால அவகாசத்தை- தேவைக்கேற்ப என மாற்றி உத்தரவிட்டால் எல்லா வாகனங்களையும் வீணாகாமல் ஏலம் விட்டு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வருவாயாக மாற்றலாம் என்றாா் புகழேந்தி.

ஆண்டுதோறும் சுமாா் 400 வாகனங்கள் (எல்லா வகைகளையும் சோ்த்து) காலாவதியாவதாகக் கூறப்படுகிறது. அவற்றை முறையாக கழித்துக்கட்டினால் கணிசமான தொகை அரசின் வருவாய்ப் பட்டியலில் இடம்பெறும். இதற்கான சீரமைப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT