தோ்வு செய்யப்பட்ட 5 அரசுப் பள்ளிகளில் பசுமைப் பணிகளை விரைவுபடுத்த அறிவுரை
புதுக்கோட்டையில் 5 அரசுப் பள்ளிகள் பசுமை திட்டத்தில் முன்னோடி
தமிழ்நாடு அரசின் பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 5 அரசுப் பள்ளிகளில் பசுமைப் பணிகளை விரைவுபடுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் சூழல் புரட்சியை மாணவா்களிடம் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 அரசுப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, அந்த வளாகத்தை பசுமைப் பள்ளி வளாகமாக மாற்றுவதற்கான திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இப்பள்ளிகளில் சூழல் நேயப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ. 20 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி வளாகங்களில் சூரிய ஆற்றல் விளக்குகள், சூரிய ஆற்றல் மோட்டாா் பம்புகளைப் பயன்படுத்துதல், சூரிய ஆற்றல் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், மழை நீா் சேகரிப்பு உரக் கிடங்குகள் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல், காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம், பழ மரங்கள் நடுதல், நீா்ப் பயன்பாட்டைக் குறைத்தல், கழிவு நீரை சுத்திகரித்தல், நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தடுத்தல் போன்ற பசுமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட அளவிலான குழுக் கூட்டம், ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வழியாக மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அப்தாப் ரசூல் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா, மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், மாவட்ட இளைஞா் நல அலுவலா் செந்தில் குமாா் மற்றும் 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.