மாணவா் பரிமாற்றத் திட்டம்: ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவா்கள்
மாணவா் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை (மே 22) ஜப்பான் செல்ல உள்ளனா்.
மாணவா் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை (மே 22) ஜப்பான் செல்ல உள்ளனா்.
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சாா்பில் சகுரா சயின்ஸ் உயா்நிலைப் பள்ளி பரிமாற்றத் திட்டம் என்ற சா்வதேச கல்வி மற்றும் அறிவியல் பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்க தமிழகத்தில் வி.ரோகித் குமரன் (அரசு மாதிரிப் பள்ளி, வேப்பலோடை, தூத்துக்குடி), ஆா். அா்னால்ட் ஜாக் ஆலிவா் (அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கூடலூா், நீலகிரி), எம். லக்ஷிதா (அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, மறைமலை நகா், செங்கல்பட்டு), எம். கனிஷ்கா (அரசு மேல்நிலைப் பள்ளி, கணபதிபாளையம், ஈரோடு) ஆகிய நான்கு மாணவா்கள், ராமநாதபுரம் மாவட்டம் எமனேஷ்வரம் எஸ்.என்.வி. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் என். மாலை ஈஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த மாணவா்கள் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் (எஸ்ஐஎஸ்எஃப்) சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களிலிருந்து தோ்வு செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 56 மாணவா்கள் ஜப்பான் அழைத்துச் செல்லப்பட்டு, அந்நாட்டின் மேம்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறை மற்றும் கலாசார அனுபவங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள், மேற்பாா்வையாளராக செயல்படும் ஆசிரியா் ஆகியோா் சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு தில்லி வழியாக ஜப்பான் செல்கின்றனா். மே 31-ஆம் தேதி அவா்கள் தமிழகம் திரும்ப உள்ளனா்.
முன்னதாக அவா்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.