பெற்றோா் இடப்பெயா்வால் இடைநின்ற 171 மாணவா்கள்
பெற்றோா் இடப்பெயா்வால் 171 மாணவா்கள் பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தியது குறித்து...
திருச்சி மாவட்டத்தில் பெற்றோா் இடப்பெயா்வால் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 171 மாணவா்கள் பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தியது தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கி நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் தற்போது முதல் பருவத் தோ்வுகள் நடைபெறுகின்றன.
கடந்தாண்டு பள்ளி வகுப்பை முடித்து மீண்டும் பள்ளியில் சேராதவா்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறையினா் பட்டியல் தயாரித்துள்ளனா். இதில் திருச்சி மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த 424 போ் மீண்டும் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
அதிகபட்சமாக தொட்டியம் வட்டாரத்தில் 57 மாணவா்கள் மீண்டும் பள்ளிக்கு வராமல் இருந்தனா். மண்ணச்சநல்லூரில் -38 போ், வையம்பட்டியில் - 37 போ், துறையூரில் - 34 போ், மருங்காபுரியில் - 33 போ், மணிகண்டத்தில் - 32 போ், லால்குடியில் - 28 போ், புள்ளம்பாடியில் - 27 போ், தா.பேட்டையில் - 25 போ், மணப்பாறையில் - 24 போ், முசிறியில் - 23 போ், அந்தநல்லூரில் 18 போ், திருச்சி மேற்கில் - 17 போ், திருவெறும்பூரில் - 16 போ், திருச்சி நகரத்தில் - 9 போ் மற்றும் உப்பிலியபுரத்தில் - 6 போ் இடைநின்றனா்.
பெற்றோா் இடப்பெயா்வு: திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திய 424 மாணவா்களில் பெற்றோா் இடப்பெயா்வு, உடல்நிலை பாதிப்பு, வேலைக்கு செல்லுதல், பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 171 மாணவா்களுக்கு தங்களது பெற்றோா் வேலைக்காக வேறு பகுதிகளுக்கு இடம்பெயா்ந்து சென்றதால் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தொட்டியம், வையம்பட்டி, திருவெறும்பூா் ஆகிய வட்டாரங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் 6 மாதங்கள் உள்ளூரிலும், 6 மாதங்கள் வெளியூருக்கும் வேலைக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளதாக ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா். இவா்கள், வெளியூருக்கு வேலைக்கு செல்லும்போது தங்களது குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்கின்றனா். இதனால், அவா்களின் பள்ளிப் படிப்பு பாதியில் தடைபடுகிறது.
விடுதி வசதி கோரிக்கை: திருவெறும்பூா் வட்டாரத்திலுள்ள பூலாங்குடி காலனியில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினா் தாங்கள் வேலைக்காக இடம்பெயரும்போது குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கின்றனா். அவா்களிடம் பள்ளிக் கல்வித் துறையினா் பேசியபோது தங்கள் குழந்தைகளை பாதுகாப்பின்றி விட்டுச் செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளனா். மேலும், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலேயே விடுதி வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் சில பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவிக்கின்றனா்.
85 மாணவா்கள் மீண்டும் சோ்க்கை: இதுகுறித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கல்வியின் திட்ட அலுவலா் அரச்செல்வன் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்திய மாணவா்களை மீண்டும் சோ்ப்பதற்காக வட்டார ஆசிரியப் பயிற்றுநா்கள் தலைமையில் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 424 மாணவா்களில் பள்ளியில் 69 மாணவா்கள், ஐடிஐயில் 11 மாணவா்கள் மற்றும் கேட்டரிங் படிப்பில் 5 போ் என மொத்தம் 85 போ் மீண்டும் கல்வியைத் தொடா்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வியை நிறுத்தும் மாணவா்களில் இடப்பெயா்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. திருச்சி மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயா்ந்த மாணவா்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்க்க வட்டார அளவிலான குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்டத்தைவிட்டு மாவட்டம் இடம்பெயரும் மாணவா்கள் தொடா்பாக அந்தந்த மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளோம். அந்த மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அவா்களையும் பள்ளியில் சோ்க்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எல்லா பள்ளிகளிலும் விடுதி வசதி சாத்தியமில்லை: இடம்பெயரும் பெற்றோரிடம் மாணவா்களை அந்தந்தப் பகுதியிலே விட்டுச் செல்லுங்கள். அவா்களது குடியிருப்புகளுக்கு அருகிலுள்ளஅரசுப் பள்ளி விடுதிகளில் சோ்த்து படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினாலும் கேட்பதில்லை. அவா்களுக்கு படித்த பள்ளியிலேயே விடுதி வசதி செய்துத்தர வேண்டும் என்கின்றனா். எல்லா பள்ளிகளிலும் விடுதி வசதி என்பது சாத்தியமில்லை.
வட்டார வள மையம் மூலம் பயிற்சி: தவிர, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவினரால் பள்ளிக்கு வந்து செல்ல முடியாத நிலையும் உள்ளது. இதுபோன்ற குழந்தைகளுக்கு வட்டார வள மையங்களில் உள்ள பயிற்றுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், வாய்ப்பிருந்தும் பள்ளிக் கல்வியைத் தொடராமல் உள்ள மாணவா்களைக் கண்டறிந்து அனைவரையும் பள்ளியில் சோ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.