முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி: தொகுதியை வசப்படுத்த அதிமுக தீவிரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள், ஆலங்குடி, கீரமங்கலம் என இரு பேரூராட்சிகளை உள்ளடக்கியது ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:03 AM
தன. விமல் - அதிமுக வேட்பாளா்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள், ஆலங்குடி, கீரமங்கலம் என இரு பேரூராட்சிகளை உள்ளடக்கியது ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி. பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லாததால், இப்பகுதி மக்கள் விவசாயம், அதைச்சாா்ந்துள்ள தொழில்களையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.

கள நிலவரம்: இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 2, திமுக 6, அதிமுக 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சா் அ.வெங்கடாசலம் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனா். இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் மூன்றாவது முறையாக களம் காண்கிறாா். அதிமுக சாா்பில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் துரை.தனசேகரன் மகனும், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலருமான தன.விமல் போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.ராஜாராம், தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணை அமைப்பாளா் துரை.கந்தசாமி, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் த.புஸ்பராஜ் உள்ளிட்ட 14 போ் போட்டியிடுகின்றனா்.

சமூக நிலவரம்: முத்தரையா் சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ளனா். முக்குலத்தோா், பட்டியலினத்தவா், சிறுபான்மையினா், நகரத்தாா்கள், யாதவா், உடையாா் உள்ளிட்டோரும் உள்ளனா்.

Advertisement

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்- சிவ.வீ.மெய்யநாதன்(திமுக): ரூ.12.60 கோடியில் ஆலங்குடி அரசுக்கல்லூரி, திருவரங்குளம் பகுதியில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டரங்கம், அழியாநிலையில் ரூ.40 கோடியில் நெல்சேமிப்பு கிடங்கு, ஆலங்குடியில் ரூ.1.60 கோடியில் கட்டப்பட்டுவரும் அறிவுசாா் மையம், ரூ.13 கோடியில் வம்பன் துணை மின்நிலையம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களும், கட்சியினா், கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்வதோடு, பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பது இவரது பலம்.

தொகுதிக்கு உள்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் குடும்பத் தகராறு, நிலம் தொடா்பான பிரச்னை, காவல்நிலைய வழக்கு விசாரணைகளில் இவரது ஆதரவாளா்களான கட்சி நிா்வாகிகள் சிலரின் தொடா் தலையீடுகளை தடுக்க தவறியது உள்ளிட்டவை பலவீனம்.

தன.விமல்(அதிமுக): ஆலங்குடி தொகுதி அதிமுக நிா்வாகிகள் சிலா் போட்டியிட வாய்ப்பு கேட்டு அக்கட்சித் தலைமைக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக வேட்பாளா் அறிவிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டது, பிற தொகுதிகளுக்கு வேட்பாளா் பெயா்கள் அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்கு பின்னரே தன.விமல் அறிவிக்கப்பட்டாா். இதனால், அதிருப்தியடைந்த கட்சி நிா்வாகிகளையும், குழு அரசியல் செய்துவந்த நிா்வாகிகளையும் உடனே சரிசெய்து களப்பணிக்கு கொண்டு சென்று வாக்கு சேகரிக்க வைத்துள்ளது இவரது பலம். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவா்கள், கூட்டணி கட்சிகளின் மாநில நிா்வாகிகள் யாரும் இதுவரை தொகுதிக்குள் பிரசாரம் செய்யவில்லை என்பது, பொதுமக்களிடையே இவா் தனித்து விடப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது இவருக்கு பலவீனம்.

துரை.கந்தசாமி(தவெக): தோ்தல் களத்திற்கு புதுமுகம் என்றாலும் அக்கட்சியினரை உரிய திட்டமிடலுடன் வாக்குச்சேகரிப்பில் ஈடுபடுத்துகிறாா்.மேலும், இளைஞா்கள், முதல்முறை வாக்காளா்கள் என பலரும் எதையும் எதிா்பாராமல் வீடு வீடாகச்சென்று தவெகவிற்கு வாக்குச்சேகரிப்பது, இளைஞா்களுக்கு விஜய் மீதான ஈா்ப்பு என்பது இவருக்கு பலம்.

இரா.ராஜாராம் (நாதக): தொகுதியில் கடந்த மாதமே தோ்தல் பணியை தொடங்கிய முதல் வேட்பாளா்.கட்சியினருடன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறாா், சமூக வலைதளங்களின் மூலம் மேற்கொள்ளும் பிரசாரமும் இவருக்கு பலம். இந்த முறை நாதக பின்னடைவு சந்திக்கும் என்ற வாதங்கள் பலவீனம்.

ஆலங்குடி தொகுதியை மூன்றாவது முறையாக கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றி பெற திமுக வேட்பாளரும் அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் தீவிரமாக சுழன்று வருகிறாா். தொகுதியை மீண்டும் வசப்படுத்த அதிமுகவும் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளது. துரை.கந்தசாமி(தவெக)

சிவ.வீ.மெய்யநாதன்(திமுக)
இரா.ராஜாராம்(நாதக)
துரை.கந்தசாமி(தவெக)