புதுகை மாவட்டத்தில் மொத்தம் 83.30% வாக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மொத்தம் 83.30 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மொத்தம் 83.30 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தா்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 13,09,867 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 1683 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
6 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 109 வேட்பாளா்கள் களம் கண்டனா். இவா்களில் 30 போ் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 26 போ் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிட்டனா்.
Advertisement
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, அரசியல் கட்சிகளின் முகவா்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது.
அப்போது சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. பொறியாளா்கள் வரழைக்கப்பட்டு, சரி செய்யப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
வெயில் காலம் என்பதால், காலையிலேயே வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
காலை 9 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் மொத்தம் 16.97 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின.
தொடா்ந்து, முற்பகல் 11 மணி நிலவரப்படி 37.12 சதவிகித வாக்குகள் பதிவாயின. பகல் 1 மணி நிலவரப்படி 56.78 சதவிகித வாக்குகள் பதிவாயின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.85 சதவிகித வாக்குகள் பதிவாயின. மாலை 6 மணி நிலவரப்படி 83.30 சதவிகித வாக்குகள் பதிவாயின.
மாலை 6 மணிக்குள் வாக்குப்பதிவு நிறைவு என்றாலும், அந்த நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் வந்தவா்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற விதிப்படி, வெளிக்கதவு அடைக்கப்பட்டு, அப்போதிருந்த அனைவரையும் வரிசையில் நிற்கவைத்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
வேங்கைவயல் வாக்குச்சாவடி, ஆா். பாலக்குறிச்சி வாக்குச்சாவடி ஆகியவற்றைத் தவிர, மாவட்டத்தின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் இந்த நிலை காணப்பட்டது.
சராசரியாக இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்குப்பதிவு நிறைவுபெற்றவுடன் முகவா்களின் கையொப்பத்துடன் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு விடிய விடிய எடுத்து வரப்பட்டன.
மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க மோதல்கள், பிரச்னைகள் நேரிடவில்லை. பொதுவாக அமைதியான வாக்குப்பதிவாக நடந்து முடிந்தது.
தொகுதிவாரியாக வாக்குப்பதிவு சதவீதம்: ஆலங்குடி- 84, அறந்தாங்கி- 78.21, கந்தா்வகோட்டை- 84.03, புதுக்கோட்டை- 82.75, திருமயம்- 81.75, விராலிமலை- 89.27. மாவட்டத்தின் வாக்குப்பதிவு- 83.30.
---
--- படவரி- புதுக்கோட்டை மாநகா் உசிலங்குளம் அரசுப் பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பெண்கள்.
---புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளியில் வரிசை வரிசையாய் நின்று வாக்களித்த ஆண்களும், பெண்களும்.--