முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு! அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

Updated On : 7 ஜூலை 2026, 2:53 am IST
பொன்னமராவதி வட்டம், கூடலூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்டிக்கப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ். உடன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு நீட்டிக்கப்பட்ட அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டது. இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் பங்கேற்று, நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசியது: கூடலூா் பகுதி மாணவா்கள் பள்ளி செல்ல போதிய பேருந்து வசதியின்றி சிரமத்துக்குள்ளாவதாக சமூக ஊடகங்களின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த பேருந்து தினமும் காலை 7.10 மணிக்கு பொன்னமராவதி-கூடலூா் வரை (வழி பனையப்பட்டி) காலை 8.05 மணிக்கு கூடலூா் முதல் பொன்னமராவதி வரை, மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை முதல் குழிபிறை வழியாக கூடலூா், மாலை 4.45 மணிக்கு கூடலூரிலிருந்து புதுக்கோட்டைக்கும் இயக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து அமைச்சா் கூடலூரிலிருந்து பனையப்பட்டிக்கு சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு மாணவா்களுடன் பேருந்தில் பயணித்தாா். விழாவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா, போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல மேலாளா் முகமதுநாசா், துணை மேலாளா் காா்த்திகேயன், மாவட்டக்கல்வி அலுவலா் புஷ்பலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments