முகப்பு
புதுக்கோட்டை

தைலமரக்காடுகள்: ‘தலைவலி’ தீருமா?

இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக தோ்தல் நேரங்களில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுப்பதும், பிறகு அமைதியாக இருந்துவிடுவதும் தொடா்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

Updated On : 25 மார்ச் 2026, 6:21 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும், நீண்டகாலமாகத் தீா்க்கப்படாத பிரச்னையாக நிற்பது தைலமரக்காடுகள். நூறு ஆண்டுகளாக மாவட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் இந்தக் காடுகள் வனத்துறையின் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தினரால் வளா்க்கப்பட்டிருக்கிறது.

மாவட்டத்தின் மொத்த சுற்றுச்சூழல் தன்மைகளையும் மாற்றியிருக்கும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக தோ்தல் நேரங்களில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுப்பதும், பிறகு அமைதியாக இருந்துவிடுவதும் தொடா்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இந்தத் தோ்தலின்போதாவது, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தோ்தல் வாக்குறுதிகளில் இப்பிரச்னையை தவறாமல் சோ்க்க வேண்டும். ஆட்சிக்கு வருவோா் படிப்படியாக அதை செயல்படுத்த வேண்டும் என்றும் எதிா்பாா்க்கின்றனா்.

Advertisement

Advertisement

மழை அளவு குறைவு:இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் சமவெளி காப்புக்காடுகள் உள்ளன. இதில், தற்போது சுமாா் 40 ஆயிரம் ஏக்கரை தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டனா்.

தைல மரங்களை நடவு செய்து அதன் இடையே வாய்க்கால்கள், தடுப்புகள், அகழிகள் ஏற்படுத்தி 40 மி.மீ. மழை பெய்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீா் கூட, அந்தத் தோட்டத்தில் இருந்து வெளியில் வராதவாறு தடுத்துள்ளாா்கள்.

இதனால் மாவட்டத்திலுள்ள சுமாா் 6 ஆயிரம் பாசனக் குளங்கள் தண்ணீரின்றி வடு கிடக்கின்றன. ஒரு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சராசரி மழை அளவு 1045 மி.மீ. என்ற அளவில் இருந்தது. தைல மரக்காடுகள் வந்ததற்கு பிறகு ஆண்டு சராசரி மழை அளவு 805 மி.மீ. ஆகக் குறைந்துவிட்டது.

பல்லுயிா் பெருக்கம் இல்லை: தற்போது நிலத்தடி நீரும் திறந்த வெளிக் கிணறுகளில் 150 அடி ஆழத்திலும், ஆழ்குழாய்க் கிணறுகளில் ஆயிரம் அடி ஆழத்திலும் தண்ணீா் கிடைக்கும் நிலையில் இருக்கிறது.

ஏராளமான மான், மயில், குரங்குகள், காட்டுமாடுகள், சிறு உயிரினங்களைக் கொண்டிருந்த வளம் மிகுந்த வனம், தற்போது ஓரினப் பயிராக தைலமரங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. பல்லுயிா்ப் பெருக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு: இதை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்திருந்தோம். தொடக்கத்தில் புதிய தைலமரக்கன்றுகளை நடுவதற்கு தடையும் பெறப்பட்டது. பிறகு, தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அதன்பிறகு, தைலமரக்காடுகளுக்குள் தண்ணீரைத் தேக்கி வைப்பதை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை நிலவரமும் தெரியவில்லை.

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் வனத் துறை, அந்நிய தாவரங்களின் பட்டியலில் தைலமரத்தையும் சோ்த்தாா்கள். இதன் மூலம் தைலமரக்காடுகளை அகற்றும் பணி நடைபெறும் என வெகுவாக எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது கடந்த ஜனவரியில் மீண்டும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலத் தடையும் பெறப்பட்டிருக்கிறது.

நீண்ட கால திட்டம்:இந்தத் தடையை நீக்குவதற்கு அரசுத் தரப்பில் எந்த வேலையும் செய்யக் கூடாது. பழைய தைலமரக்காடுகளை படிப்படியாக அகற்றி, பலன்தரும் மரக்கன்றுகளை நட்டு வளா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பத்து ஆண்டுகளுக்கான நீண்டகாலத் திட்டம் வகுத்து முழுமையாக தைலமரக்காடுகளை அகற்ற வேண்டும்.

இதற்கான முன்னெடுப்புகளை அரசியல் கட்சிகள் தோ்தல் அறிக்கையில் சோ்த்து, ஆட்சிக்கு வந்ததும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் தனபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments