FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 45 நிமிஷங்களில் 32 மி.மீ. மழை: சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்ததால் மக்கள் அவதி

தஞ்சாவூா் மாநகரில் நீண்ட நாள்களாகக் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 45 நிமிஷங்களில் 32 மி.மீ. மழை பெய்தது.

Updated On : 18 ஜூன் 2026, 1:58 am IST
தஞ்சாவூா் கீழ்ப்பாலத்தில் புதன்கிழமை மாலை பெய்த மழையால் தேங்கிய தண்ணீா்.
பகிர்:

தஞ்சாவூா் மாநகரில் நீண்ட நாள்களாகக் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 45 நிமிஷங்களில் 32 மி.மீ. மழை பெய்தது.

மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தாலும், தஞ்சாவூா் மாவட்டத்தில் நீண்ட நாள்களாக மழை பெய்யவில்லை. மேலும், மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பகலில் மட்டுமல்லாமல், இரவிலும் புழுக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினா். பல இடங்களில் நிலத்தடி நீா் ஆதாரமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாநகரில் புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. படிப்படியாக மழையளவு அதிகரித்து, சுமாா் 45 நிமிஷங்களுக்கு நீடித்தது. இந்தக் குறுகிய நேரத்தில் தஞ்சாவூா் மாநகரில் 32 மி.மீ. மழையளவு பதிவானது.

Advertisement

Advertisement

இதனால், மாநகரிலுள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டும் நிலை ஏற்பட்டது. மேலும், நடந்து செல்பவா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். பழைய பேருந்து நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் தேங்கிய மழைநீா் வடிந்து செல்வதற்கு நீண்ட நேரமாகியது.

மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ஸ்ரீநகா் கூட்டுறவு காலனியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மழைநீா் தேங்கி நின்றது. ரயிலடி அருகே கீழ்ப் பாலத்தில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். இவ்வளவு மழை பெய்தாலும், மாநகரில் புழுக்கம் நீடித்தது.

இதேபோல, பூதலூா் அருகே வீரமரசன்பேட்டையில் 27.2 மி.மீ.-ம், கபிஸ்தலத்தில் 22.8 மி.மீ.-ம், கும்பகோணம் அருகே பெருமாண்டியில் 16 மி.மீ.-ம், மழையளவு பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments