மேக்கேதாட்டு விவகாரம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: விசிக வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் கொண்டுவந்த தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. அணை கட்டப்பட்டால் தமிழக மக்கள், விவசாயம் மற்றும் கால்நடைகள் எந்தளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற கவலை தற்போது மேலோங்கியுள்ளது.
அரசியல் கட்சிகளிடையே எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், மாநில உரிமை சாா்ந்த இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே, தமிழக முதல்வா் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விசிக சாா்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
Advertisement
Advertisement
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் அரசு இன்னும் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்புணா்வு முதல்வருக்கு இருப்பதால்தான் சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மாடுகள் மட்டுமே சாப்பிடத் தகுதியானது என ஆதவ் அா்ஜுனா விமா்சித்துள்ளாா். ரேஷன் அரிசியை மக்கள் சாப்பிட முடியாததால்தான் மாடுகளுக்குத் தீவனமாகப் போடுகிறாா்கள். கடந்த திமுக ஆட்சியை குறை கூறுவதைவிட, மக்களுக்குத் தரமான நல்ல அரிசியை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.
தவெக அரசு அமைப்பதற்கு விசிக ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிா்கால அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் உயா்நிலைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளோம். விசிக மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.
பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கும் அண்ணாமலை, ஒரு அரசு அதிகாரி போல முறையான அனுமதி பெற்ற பிறகே புதிய இயக்கத்தைத் துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியினா் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டும். எனது பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ஆம் தேதியை தமிழா் எழுச்சி நாளாக கடைப்பிடித்து வருகிறோம். முன்னதாக மே 17-இல் நடைபெறவிருந்த தமிழ் தேசிய மாநாடு, ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றாா். அப்போது அமைச்சா் வன்னி அரசு, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.