வியாபாரியின் வீட்டை சூறையாடிய 2 பேர் கைது
தஞ்சாவூரில் பால் வியாபாரியின் வீட்டை சேதப்படுத்தியதாக இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூரில் பால் வியாபாரியின் வீட்டை சேதப்படுத்தியதாக இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தஞ்சாவூர் வண்டிக்காரத்தெருவைச் சேர்ந்தவர் சொ. கருப்பையா (52). பால் வியாபாரி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் நீண்டகாலமாக இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் வீட்டருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் நடனம் ஆடியது தொடர்பாக ராஜேந்திரன் மகன் கனிஷ்கர் (23) என்பவருக்கும், கருப்பையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கனிஷ்கர், தனது நண்பரும், சோழன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தேவேந்திரன் (20) ஆகிய இருவரும் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்து, கருப்பையாவிடம் தகராறில் ஈடுபட்டனராம். மேலும், கருப்பையாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை அடித்து உடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தடுக்க வந்த கருப்பையாவையும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, கனிஷ்கர், தேவேந்திரன் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.