தஞ்சாவூர்

இளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்புச் சட்டம் தேவை

DIN

இளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இப்பெருமன்றத்தின் மாவட்ட கோரிக்கை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 99 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர். 
இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசுத் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும். மாவீரன் பகத்சிங் பெயரில் தேசிய இளைஞர்களுக்கான வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்றி அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலையில்லா கால நிவாரண உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் வழங்குவது மட்டுமின்றி மிகக் குறைவான தொகையாக உள்ளது. 
இந்தத் தொகையைக் கொண்டு வேலைவாய்ப்பிற்காக எந்த நிறுவனத்துக்கும் விண்ணப்பிக்க முடியாது. இந்நிலையைப் போக்கிட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 5,000-ம், மற்றவர்களுக்கு ரூ. 3,000-ம் என உயர்த்தி வேலை கிடைக்கும் வரை வழங்க வேண்டும். 
அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 40, 37, 35 என்பதை மாற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 ஆகவும் வயது உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியான பல இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு தகர்க்கப்பட்டுள்ளது. 
எனவே அரசுப் பணிக்கான வயது உச்சவரம்பு குறைத்ததை கைவிட்டு இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்குவதில் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் கோ. சக்திவேல், கே. செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சி. பாலசந்திரன் தொடக்கவுரையாற்றினார். 
மாநிலத் தலைவர் பெ. முருகேசு நிறைவுரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி,  ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் க. அன்பழகன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் எஸ். செந்தூர்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்டத் தலைவராக வா. இளையராஜா, துணைத் தலைவர்களாக எஸ்.எம். குருமூர்த்தி, சு. துர்காதேவி, மாவட்டச் செயலராக ஆர்.ஆர். முகில், துணைச் செயலர்களாக செ. செந்தமிழ்ச்செல்வன், ஜி. சிவக்குமார், பொருளாளராக எஸ். இலங்கேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT