முகப்பு
தஞ்சாவூர்

பரிதாப நிலையில் உடற்கூறாய்வுக் கூடம்!

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:43 PM
கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அரசுப் பொது மருத்துவமனைக்கு 30-க்கும் மேற்பட்ட சுற்றுவட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

மேலும், இப்பகுதிகளில் நிகழும் சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்கள். நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை காவல்துறையினர் வழக்குப் பதிந்து பிரேதப் பரிசோதனைக்காக இம்மருத்துவமனையின் உடற்கூறாய்வு கூடத்துக்குதான் கொண்டு வரப்பட்டன.

இந்த உடற்கூறாய்வுக் கூடம் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் பயன்படுத்த இயலாதநிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கூடத்தின் பயன்பாடு நிரந்தரமாக கைவிடப்பட்டது.

Advertisement

இதனால் இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பிரேதங்கள் திருவையாறு பூதலூர் அல்லது தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்களை இழந்த துக்கத்தில் இருப்பவர்கள் மிகவும் அல்லல் படும் நிலை ஏற்படுகிறது. எனவே. பழைய உடற்கூறாய்வுக் கூடத்தை இடித்து அகற்றி புதிதாக கட்டித் தர வேண்டும் என்று பல்வேறு பொது நல அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேசுரன் இது குறித்து சட்டப்பேரவையில் கோரிக் கையை வைத்தார். இதற்கு கடந்த 2022 மே 10 ஆம் தேதி சட்டப் பேரவையில் பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

திருக்காட்டுப்பள்ளியில் புதிய உடற்கூறாய்வுக் கூடம் உடனடியாக அமைக்கப்படும் என்றார். அறிவித்து 47 மாதங்களை கடந்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் பிரேதங்களை உடற்கூறாய்வுக்காக தஞ்சை, பூதலூர், திருவையாறு என்று ஊர் ஊராக தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. துக்கத்தில் இருக்கும் மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும் நிலை தொடர்கிறது. எனவே, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியதை வரும் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments