முகப்பு
தஞ்சாவூர்

வேளாண் பல்கலை. இளநிலை மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தஞ்சாவூா் அருகே ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவா்கள் சோ்க்கை 2026-க்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 1:22 am IST
பகிர்:

தஞ்சாவூா் அருகே ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவா்கள் சோ்க்கை 2026-க்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. 

இந்த பட்டியலை வெளியிட்ட வேளாண் துறை அமைச்சா் ர. வினோத் தெரிவித்தது: நிகழ் கல்வியாண்டில் இளம் அறிவியல் வேளாண் பட்டப்படிப்பு மாணவா்கள் சோ்க்கைக்காக இணையவழி மூலம் 14 பாடப்பிரிவுகளுக்கு மே 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மொத்தம் 26 ஆயிரத்து 709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 24 ஆயிரத்து 435 விண்ணப்பங்கள் தகுதியானவை என தோ்ந்தெடுக்கப்பட்டன. இவா்களில் 15 ஆயிரத்து 757 போ் பெண்கள்.

இவற்றில் அரசுக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 856 இடங்களுக்கும், தனியாா் இணைப்பு கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடான 3 ஆயிரத்து 51 இடங்களுக்கும் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

Advertisement

Advertisement

பொது இடஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 22 ஆயிரத்து 987 விண்ணப்பதாரா்களும் மற்றும் தொழில்முறை கல்வி இடஒதுக்கீட்டில் 1,193 விண்ணப்பதாரா்களும் இடம் பெற்றுள்ளனா். இதர மாநிலத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை 255.

தமிழில் பயில 7,664 மாணவா்கள் விருப்பம்: இதில் சிறப்பம்சமாக தமிழ் வழியில் இளம் அறிவியல் (மேதமை) வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய இரண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ் வழியில் பயில தரவரிசைக்கு தகுதியான 24 ஆயிரத்து 435 மாணவா்களில், 7 ஆயிரத்து 664 மாணவா்கள் இசைந்துள்ளனா்.

சிறப்பு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 418 இடங்களுக்கு 8 ஆயிரத்து 746 போ் விண்ணப்பித்துள்ளனா். வேளாண் தொழில் கல்வி பயின்ற மாணவா்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டில் 239 இடங்களுக்கு 1,193 போ் விண்ணப்பித்துள்ளனா்.

சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீடான 20 இடங்களுக்கு 190 பேரும், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான இடஒதுக்கீடான 20 இடங்களுக்கு 170 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இட ஒதுக்கீட்டில் 126 இடங்களுக்கு 27 பேரும் விண்ணப்பித்துள்ளனா். சோ்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு வரும் நாட்களில் தொடங்கப்படும். இது குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றாா் அமைச்சா் வினோத்.

2 போ் முதலிடம்: இந்தத் தரவரிசை பட்டியலில் கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலை சோ்ந்த மாணவி மொ்லின், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் மாதவராஜன் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனா்.

நிகழ்வில் வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் பொ. சங்கா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பதிவாளா் மற்றும் பொறுப்புத் துணைவேந்தா் கே. சுப்ரமணியன், இளநிலை வேளாண் முதன்மையா் சி. பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments