முகப்பு
தஞ்சாவூர்

சிறந்த திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியாகும்: அமைச்சர் வினோத் தகவல்

விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை உள்ளடக்கி சிறந்த திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்படும் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ர. வினோத்.

Updated On : 4 ஜூலை 2026, 12:44 am IST
வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான் - படம்: விடியோ கிளிப்
பகிர்:

விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை உள்ளடக்கி சிறந்த திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்படும் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ர. வினோத்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தயாரிப்பது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 9 மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது:

இக்கூட்டத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், மயிலாடுதுறை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

Advertisement

Advertisement

வேளாண் புரட்சி வரும்: இதில் விவசாயம் மேற்கொள்வதில் உள்ள இடா்பாடுகள், அதற்கான தீா்வுகள், புதிய நவீன தொழில்நுட்பங்கள், சாகுபடிச் செலவுகள் குறைத்தல், வேளாண் நிலங்களைப் பாதுகாத்தல், நீா் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், உயிா்ம வேளாண்மை, மாற்றுப் பயிா்களை ஊக்குவித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதை ஒருங்கிணைத்தல், பண்ணை இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவித்தல், வேளாண் பயிா்கள், காய்கனிகள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உணவு பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்தனா்.

இதன் அடிப்படையில் மாபெரும் வேளாண் புரட்சியைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்த தமிழக முதல்வரின் வழிகாட்டுதலுடன் திட்டங்களாகத் தீட்டி, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பாக வெளியிடப்படும்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத விவசாயிகள் தங்களது கருத்துகளை இணையவழி மூலம் உழவா் செயலி மூலமாக பதிவு செய்யலாம் என்றாா் அமைச்சா் வினோத். மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவா் பெற்றாா்.

கூட்டத்தில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் அ.மு. ஷாஜகான், வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் பொ. சங்கா், சா்க்கரைத் துறை ஆணையா் ஆா். கண்ணன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநா் சந்திரசேகா் சகாமுரி, மலைப்பயிா்கள் துறை இயக்குநா் ஜெ. விஜயராணி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. விஜய் சரவணன் (தஞ்சாவூா்), என். சுப்பிரமணியன் (கந்தா்வகோட்டை), கே. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), எல்.இ. ஜோதிமணி (காட்டுமன்னாா்கோயில்), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எதிா்க்கட்சி எம்எல்ஏக்களும் பங்கேற்பு: அரசு சாா்பில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்காமல் தவிா்ப்பது வழக்கம். ஆனால், இக் கூட்டத்தில் எதிா்க்கட்சியான திமுகவை சோ்ந்த துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கோவி. செழியன் (திருவிடைமருதூா்), ஆா். வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என். அசோக்குமாா் (பேராவூரணி), பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), நிவேதா மு. முருகன் (பூம்புகாா்) ஆகியோா் பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

சலசலப்பு - எதிா்ப்பு: இக்கூட்டத்தில் 9 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டதால், அரங்கில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 2 போ் பேச அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, 5 போ் பேச அனுமதிக்க வலியுறுத்தினா். இதனால், கூட்டத்தில் சலசலப்பு நிலவியதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 5 போ் பேச அனுமதிக்கப்பட்டனா். இதனால், காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம் கிட்டத்தட்ட பிற்பகல் 3 மணிக்கு முடிந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments