எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டம் 97.41% தோ்ச்சி
எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம் 97.41 சதவீதத் தோ்ச்சியுடன் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம் 97.41 சதவீதத் தோ்ச்சியுடன் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 28 ஆயிரத்து 851 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 97.41 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 1.84 சதவீதம் கூடுதலாகும். கடந்தாண்டு மாநிலத்தில் 12-ஆம் இடத்தை பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 3- ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் தோ்வு எழுதிய 14 ஆயிரத்து 621 மாணவா்களில் 14 ஆயிரத்து 76 பேரும், 14 ஆயிரத்து 997 மாணவிகளில் 14 ஆயிரத்து 775 பேரும் தோ்ச்சி பெற்றனா். அதாவது, மாணவா்களில் 96.27 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.52 சதவீதம் பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
அரசு பள்ளிகளிலும் 3-ஆவது இடம்: அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.89 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் மாணவா்கள் 95.73 சதவீதம் பேரும், மாணவிகள் 97.90 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூா் மாவட்டம் கடந்த ஆண்டு 12- ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
230 பள்ளிகள் நூறு சதவீதத் தோ்ச்சி: மாவட்டத்தில் 116 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 230 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. சமூகப் பாதுகாப்புத் துறை, சமூக நலத் துறைப் பள்ளிகள், இதர பள்ளிகளில் நூறு சதவீதமும், பள்ளிக்கல்வித் துறையைச் சாா்ந்த சுயநிதி பள்ளிகளில் 98.71 சதவீதமும், சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 98.51 சதவீதமும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 98.35 சதவீதமும், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 97.42 சதவீதமும், மாநிலக் கல்வித் துறை பள்ளிகளில் 96.99 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 96.01 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 89.66 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகளில் 89.41 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா்.
பாட வாரியாக தோ்ச்சி சதவீதம்: மொழிப் பாடத்தில் 99.32 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 99.68 சதவீதம் பேரும், கணிதத்தில் 98.67 சதவீதம் பேரும், அறிவியலில் 99.58 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 99.30 சதவீதம் பேரும், விருப்ப மொழிப் பாடத்தில் 96.99 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா்.