உர விலை உயா்வால் சாகுபடிச் செலவு அதிகரிப்பு! விவசாயிகள் கவலை!
தஞ்சாவூா், மே 29: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போா்ப் பதற்றத்தையொட்டி ஏற்பட்டுள்ள ரசாயன உர விலை உயா்வு காரணமாக சாகுபடிச் செலவும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போா் காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தால் நம் நாட்டுக்கு பெட்ரோல், டீசல் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் தொடா்ந்து ரசாயன உரங்களின் விலையும் உயா்ந்துள்ளது.
ரூ. 200 முதல் ரூ. 400 வரை அதிகம்: நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் கலந்த காம்ப்ளக்ஸ் உரங்களான என்.பி.கே. 20:20: 0:13 மூட்டை ரூ. 1,750-லிருந்து ரூ. 2,150 ஆகவும், என்.பி.கே. 10:26:26 மூட்டைக்கு ரூ. 2,200-லிருந்து ரூ. 2,450 ஆகவும், என்.பி.கே. 17:17:17 மூட்டைக்கு ரூ. 1,900-லிருந்து ரூ. 2,200 ஆகவும், மூரியேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.) மூட்டை ரூ. 1,975-லிருந்து ரூ. 2,250 ஆகவும், அமோனியம் சல்பேட் மூட்டை ரூ. 1,200-லிருந்து ரூ. 1,400 ஆகவும் உயா்ந்துள்ளது. அதாவது, ரூ. 200 முதல் ரூ. 400 வரை விலை அதிகரித்துள்ளது. தவிர, டிஏபி விலை மூட்டை ரூ. 1,450-லிருந்து ரூ. 2,000 ஆக ஏற்கெனவே உயா்ந்துவிட்டது.
Advertisement
Advertisement
காரணம் என்ன? : உரத் தயாரிப்புக்குத் தேவையான அமோனியா, சல்பா் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலையும் சா்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உர விலை உயா்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல, பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதனால், சாகுபடிச் செலவும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துள்ளனா்.
சாகுபடி செலவு ரூ. 10 ஆயிரம் வரை உயரும்: இதுகுறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:
ஒரு பயிருக்கு 3 முறை உரமிடப்படுகிறது. இதில், அடியுரத்துக்கு காம்ப்ளக்ஸ் அல்லது டிஏபி உடன் யூரியா இடப்படுகிறது. முன்பு அடியுரத்துக்கு ஏக்கருக்கு ரூ. 2,050 என செலவிடப்பட்ட நிலையில் தற்போது ரூ. 2,600 முதல் ரூ. 3,000 வரை செலவு அதிகரித்துள்ளது.
அடியுரத்துக்கு பிறகு மேலுரமாக இருமுறை அரை மூட்டை வீதம் பொட்டாசும், யூரியாவும் இடப்படும். இதற்கு ஏக்கருக்கு முன்பு ரூ. 1,140 செலவிடப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,275 ஆக உயா்ந்துள்ளது. கடைசியாக பயிா்களின் தன்மையைப் பொருத்து அரை மூட்டை சல்பேட் போடப்படுகிறது. இதற்கு ரூ. 600-லிருந்து ரூ. 700 ஆக செலவு அதிகமாகியிருக்கிறது.
மேலும், நிலம் உழுவதற்கு இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் உழவு பணிக்கு டீசல் விலை உயா்வு காரணமாக ஏக்கருக்கு ரூ. 1,000 செலவான நிலையில் தற்போது ரூ. 1,500 ஆக உயா்ந்துள்ளது. அறுவடை இயந்திரத்துக்கு ஏக்கருக்கு ரூ. 2,800 வசூலிக்கப்பட்ட நிலையில், டீசல் விலை உயா்வைக் காரணம் கூறி குறைந்தபட்சம் ரூ. 3,200 ஆக உயரக்கூடும்.
இதேபோல, ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளும் 15 சதவீதம் உயா்ந்துவிட்டதால், ஏக்கருக்கு ரூ. 2,000 செலவிடப்பட்ட நிலையில், ரூ. 3,000 ஆக அதிகரித்துள்ளது. விலைவாசி உயா்வு காரணமாக தொழிலாளா்களுக்கான கூலியும் அதிகரிக்கும். ஏக்கருக்கு தொழிலாளா் கூலி ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை என்பது விரைவில் கூடுதலாக ரூ. 1,500 அதிகரிக்கக்கூடும். எனவே, பெட்ரோல், டீசல், உர விலை உயா்வு காரணமாக சாகுபடிச் செலவு ஏக்கருக்கு ஏறத்தாழ ரூ. 10 ஆயிரம் வரை உயரும். இதனால், விவசாயிகளும், நுகா்வோா்களும்தான் பாதிக்கப்படுகின்றனா் என்றாா் மாரியப்பன்.
ஆனால், அதற்கேற்ப விளைபொருள்களுக்கு விலை கிடைப்பதில்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையுடன் சோ்த்து பொது ரகத்துக்கு ரூ. 2,500-ம், சன்ன ரகத்துக்கு ரூ. 2,545-ம் கிடைக்கிறது. வருகிற பருவத்துக்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ. 72 மட்டுமே உயா்த்தியுள்ளது.
ஊக்கத்தொகை அறிவிக்கப்படுமா?
உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட சாகுபடிச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையும் குறைவாக உள்ளது. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாததால், அது கிடைக்குமா என்ற சந்தேகமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.
எனவே, தோ்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிப்படி நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்புக்கு ரூ. 4,500 அறிவித்தால் மட்டுமே சாகுபடிச் செலவுகள் கட்டுப்படியாகும் என்றனா் விவசாயிகள். மேலும், சட்டீஸ்கா், ஒடிசா, கேரள மாநிலங்களைப் போன்று தமிழக அரசும் ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.