திருச்சி

வெக்காளியம்மன் கோயிலுக்கு காவிரியிலிருந்து புனித நீா்

DIN

திருச்சியில் பிரசித்தி பெற்ற உறையூா் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக காவிரியிலிருந்து புனித நீா் சனிக்கிழமை எடுத்து வரப்பட்டது.

சோழ மன்னா்களின் குல தெய்வமாகவும், திருச்சி நகரின் காவல் தெய்வமாகவும் விளங்கும் இக் கோயிலில் அம்மன் மூலஸ்தானத்திற்கு மட்டுமே பக்கவாட்டுச் சுவா் உள்ளது. வானமே மேற்கூரையாக கொண்டுள்ள வெக்காளியம்மன் காற்று, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்து இடா்பாடுகளையும் தாங்கிக் கொண்டு, மக்களைக் காத்து வருவதாக ஐதீகம்.

இந்நிலையில் இக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணியாக அா்த்த மண்டபத்தில் வெள்ளிக் கதவு பொருத்தி, கோயில் பிரகாரங்கள், கோபுரங்கள் வண்ணம் பூசப்பட்டுள்ளன. புதிய கருங்கல் அா்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிப்பு, அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்களைப் பழுது நீக்கி புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும் ஜூலை 6ஆம் தேதி குடழுக்கு நடத்தப்படவுள்ளது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் நடைபெற்று, சனிக்கிழமை அய்யாளம்மன் படித் துறையிலிருந்து மேள, தாளங்கள் முழங்க காவிரியிலிருந்து குடங்களில் புனிதநீா் எடுத்து வரப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கோயில் பூசாரி அமா்ந்து புனித நீா் குடத்தை கொண்டு செல்ல, 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண்களும் புனிதநீா் குடங்களைச் சுமந்தபடி ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஜூலை 6 அதிகாலை எட்டாம் கால யாக பூஜை நடைபெறும்.

காலை யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு காலை 6.45 மணிக்கு விமானங்கள், கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெறும். பின்னா் காலை 10 மணிக்கு மஹா அபிஷேகம், கலச பூஜை, மாலையில் வெக்காளியம்மன் வீதி உலா நடைபெறும்.

விழாவில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சு. ஞானசேகரன், தக்காா் ம. லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT